“அடுத்த சுற்றுப்பயணத்தின்போது பிரதமர் மோடி, நிரவ் மோடியையும் அழைத்து வரவேண்டும்” என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
மேகலாயாவில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உரையாற்றினார். இந்த உரையில் ராகுல், பிரதமர் மோடியைக் கடுமையாகத் தாக்கிப் பேசினார். மேலும், சமீபத்தில் வங்கி மோசடியின் மூலம் நாட்டைவிட்டே தப்பி ஓடிய நிரவ் மோடியுடன் பிரதமர் மோடியை ஒப்பிட்டுப் பேசினார்.
உரையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் பேசுகையில், "பஞ்சாப் நேஷனல் வங்கி என்ற பெயரில் நாட்டு மக்களுக்கு உதவி செய்யும் போர்வையில் நிரவ் மோடி என்ற வைர வியாபாரி மக்களுக்காகவே சேவை செய்வதாகக் கூறி தற்போது நாட்டு மக்களின் பணத்தை மோசடி செய்து நாட்டை விட்டே தப்பிவிட்டார்.
இதேபோல் சில ஆண்டுகளுக்கு முன்னர் நாட்டு மக்களுக்காவே பதவியேற்பதாகவும், ஒவ்வொரு குடிமகனின் வங்கியிலும் 15 லட்சம் ரூபாய் சேமிப்பு இருக்குமென்றும் 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கித் தரப்படும் என்றும் மற்றொரு மோடி தெரிவித்தார். ஆனால், இந்த மோடியும் மக்களை ஏமாற்றிவிட்டார்” எனக் கடுமையாகத் தாக்கிப் பேசினார்.