பிரசித்தி பெற்ற பூரி ஜெகநாதர் கோவிலில் பூசாரிகள், ஊழியர்கள் உட்பட 400 பேருக்கு கொரோனா தொற்று பரவியதால் அங்குப் பூஜைகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள பூரி ஜெகநாதர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாகும். இங்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள்.
இந்நிலையில் கொரோனா பரவலைத் தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் முதல் இக்கோவிலும் மூடப்பட்டுள்ளது. தற்போது லாக்டவுன் நிபந்தனைகள் தளர்த்தப்பட்டு வருவதால் கோவில்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களில் பக்தர்களைத் தரிசனத்திற்கு அனுமதிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆனால் பூரி ஜெகநாதர் கோவிலில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இங்குள்ள பூசாரிகள் மற்றும் ஊழியர்கள் 21 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. கோவில் நிர்வாகத்தின் இந்த முடிவை எதிர்த்து ஒடிசா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் இக்கோவிலில் பூசாரிகள் மற்றும் ஊழியர்கள் இடையே கொரோனா தொற்று அதிக அளவில் பரவத் தொடங்கியது. இதையடுத்து இங்கு பணிபுரியும் 822 ஊழியர்களுக்குப் பரிசோதனை நடத்தப்பட்டதில் 379 பேருக்கு நோய்ப் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து ஜெகநாதர் கோவில் நிர்வாக அதிகாரி அஜய் குமார் ஜனா கூறியது: இதுவரை கோவில் பூசாரிகள் மற்றும் ஊழியர்கள் 400 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலான பூசாரிகளுக்கு நோய் பரவி இருப்பதால் அவர்கள் அனைவரும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இதுவரை 9 பேர் மரணமடைந்துள்ளனர். 16 பேர் புவனேஸ்வரில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். பூசாரிகளுக்கும் நோய் பரவி இருப்பதால் பூஜைகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தங்களுடைய மற்றும் குடும்பத்தினரின் பாதுகாப்பு கருதி நவம்பர் மாதம் வரை கோவிலைத் திறக்க வேண்டாம் என்று பூசாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து உயர்நீதிமன்றத்திலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை கோவில் பூஜைகள் எதுவும் முடங்கவில்லை. ஆனால் இதே நிலை நீடித்தால் பூஜைகள் முடங்கும் அபாயம் உள்ளது என்று கூறினார்.