நாடெங்கும் அடுத்தடுத்து தேர்தல் திருவிழாக்கள் அரங்கேற இருக்கிறது. தேர்தலில் போட்டியிடும் ஒரு வேட்பாளர் எவ்வளவுதான் பணம் வைத்திருந்தாலும் தேர்தல் ஆணையம் இலக்கு நிர்ணயித்திருக்கிறது.இதன்படி நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் ரூ.70 லட்சமும், சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் ரூ.28 லட்சமும் அதிகபட்ச செலவு செய்யலாம். ஒவ்வொரு வேட்பாளரும் தேர்தல் செலவிற்காகத் தனி வங்கிக் கணக்கு வைத்து செலவு விவரங்களைப் பராமரிக்க வேண்டும்.
பராமரிக்கப்படும் தேர்தல் செலவின கணக்குகளை அதற்கான ஆவணங்களுடன் உரியப் படிவங்களில் தாக்கல் செய்யவேண்டும். நட்சத்திர பேச்சாளர்கள், கட்சித் தலைவர்கள் பிரச்சாரம் செய்யும்போது வேட்பாளர் அல்லது அவருடைய முகவர் மேடையில் தோன்றினால், நட்சத்திர பேச்சாளர், கட்சித் தலைவர் பயணச்செலவு நீங்கலாக ஊர்வலம், பொதுக்கூட்ட முழுச்செலவும் வேட்பாளர் செலவில் சேர்க்கப்படும்.
தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட 30 நாட்களுக்குள் தேர்தல் செலவு கணக்கினை மாவட்ட தேர்தல் அலுவலரிடம், வேட்பாளர்கள் தாக்கல் செய்ய வேண்டும் என்றெல்லாம் ஏகப்பட்ட நிபந்தனைகளைத் தேர்தல் ஆணையம் வகுத்துள்ளது.இது ஒருபுறமிருக்க
கொரோனா பரவலுக்குப் பின்னர் நாட்டிலேயே முதன் முறையாகப் பீகார் சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலுடன் ஒரு பாராளுமன்ற தொகுதிக்கும், 59 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலும் நடக்க உள்ளது.
கொரானா தொற்று பரவல் ஓரளவு கட்டுக்குள் வந்து இருந்தாலும் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் ஊரடங்கு இன்னும் முழுமையாக விலக்கிக்கொள்ளப்படாத நிலையில், தேர்தல் செலவுக்கான உச்சவரம்பை 10 சதவீதம் உயர்த்த மத்திய சட்ட அமைச்சகத்திடம் தேர்தல் ஆணையம் அனுமதி கேட்டது.ஆனால் சட்ட அமைச்சகம் இதுவரை அனுமதி அளிக்கவில்லை. எனவே, தற்போது அமலில் உள்ள உள்ள நடைமுறைப்படியே வேட்பாளர்கள் தேர்தலில் செலவு செய்ய முடியும்.