காலை வெட்டுவேன் கள்ள ஓட்டை தடுத்த அதிகாரிக்கு மிரட்டல் விடுத்த எம்எல்ஏ

by Nishanth, Jan 9, 2021, 09:43 AM IST

உள்ளாட்சித் தேர்தலில் கள்ள ஓட்டை தடுக்க முயன்ற வாக்குப்பதிவு மைய அதிகாரியின் காலை வெட்டுவேன் என்று சிபிஎம் எம்எல்ஏ மிரட்டியதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் நடந்துள்ளது. தேர்தல் முடிந்து ஒரு மாதத்திற்குப் பின்னர் இந்த தகவலை வாக்குப்பதிவு மைய அதிகாரி தன்னுடைய பேஸ்புக்கில் குறிப்பிட்டுள்ளார்.கேரள மாநிலத்தில் கடந்த மாதம் மூன்று கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.இந்த தேர்தலில் மாநகராட்சி, மாவட்ட பஞ்சாயத்து, கிராம பஞ்சாயத்து, ஊராட்சி ஒன்றியம் உள்பட அனைத்து வார்டுகளிலும் சிபிஎம் தலைமையிலான இடது முன்னணி அமோக வெற்றி பெற்றது. காசர்கோடு, கண்ணூர் உள்பட வட மாவட்டங்களில் கடந்த மாதம் 14ம் தேதி 3வது கட்டமாகத் தேர்தல் நடந்தது.

இதில் பாக்கம் என்ற இடத்தில் உள்ள ஒரு பள்ளியில் வாக்குப் பதிவு மைய அதிகாரியாக விவசாய பல்கலைக் கழகப் பேராசிரியர் ஸ்ரீகுமார் என்பவர் நியமிக்கப்பட்டிருந்தார். அந்தப் பகுதியில் சிபிஎம் கட்சிக்கு அதிக செல்வாக்கு உள்ளது. பெரும்பாலும் அப்பகுதியில் உள்ள பூத்துகளில் சிபிஎம் ஏஜெண்டுகள் மட்டுமே இருப்பார்கள். வேறு எந்த கட்சி ஏஜெண்டுகளாலும் பூத்துக்குள் நுழையவே முடியாது. இதனால் அடிக்கடி கள்ள ஓட்டுகள் தொடர்பான புகார் அங்குக் கூடுதலாக வருவது உண்டு. கடந்த மாதம் நடந்த தேர்தலிலும் இதே போல ஏராளமானோர் கள்ள ஓட்டுகள் போட முயன்றனர். அதை ஸ்ரீகுமார் தடுத்தார். அதற்கு சிபிஎம் பூத் ஏஜெண்டுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் ஒருவர் கள்ள ஓட்டுப் போட முயன்றபோது அதை ஸ்ரீகுமார் தடுத்துள்ளார். இதனால் பூத்தில் கடும் அமளி ஏற்பட்டது. இந்த சமயத்தில் ஓட்டு போடுவதற்காக அந்த தொகுதி சிபிஎம் எம்எல்ஏவான குஞ்சி ராமன் அங்கு வந்தார்.அவர் வாக்குப்பதிவு மைய அதிகாரி ஸ்ரீ குமாரை மிரட்டியதாகக் கூறப்படுகிறது. ஓட்டுப் போடுவதை தடுத்தால் காலை வெட்டுவேன் என்று மிரட்டியுள்ளார். மேலும் இதுகுறித்து எம்எல்ஏ உடனடியாக காசர்கோடு மாவட்ட கலெக்டரிடம் தொலைப்பேசி செய்து ஸ்ரீகுமாருக்கு எதிராகப் புகார் கொடுத்தார். கலெக்டரும் ஸ்ரீ குமாரைக் கண்டித்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த சம்பவம் நடந்து ஒரு மாதத்திற்குப் பின்னர் ஸ்ரீகுமார் தன்னுடைய பேஸ்புக்கில் வாக்குப் பதிவு மையத்தில் நடந்த சம்பவம் குறித்து விரிவாகக் குறிப்பிட்டுள்ளார். நான் பணியில் இருந்த பூத்தில் ஏராளமான கள்ள ஓட்டுகள் போடப்பட்டன. நான் வாக்காளர்களின் அடையாள அட்டைகளைப் பரிசோதிக்க முயன்றபோது அங்கிருந்த சிபிஎம் பூத் ஏஜெண்டுகள் அதைத் தடுத்தனர்.

இந்நிலையில் ஒருவர் கள்ள ஓட்டுப் போட முயன்றபோது அதை நான் தடுத்தேன். இதனால் பூத்தில் கடும் அமளி ஏற்பட்டது. சத்தத்தை கேட்டு அங்கு வந்த எம்எல்ஏ குஞ்சி ராமன் என்னை மிரட்டினார். ஓட்டுப் போடுவதற்கு அனுமதிக்க மறுத்தால் காலை வெட்டுவேன் என்று அவர் கூறினார். இது குறித்து பின்னர் மாவட்ட கலெக்டரிடம் புகார் செய்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பூத்தில் என்ன நடந்தது என்பது குறித்து அதிகமாக யாருக்கும் தெரியாது. நடந்த சம்பவங்கள் அனைத்தும் பூத்தில் உள்ள கேமராவில் பதிவாகி உள்ளது. அந்த தைரியத்தில் தான், நான் இப்போது நடந்த உண்மைகளைத் தெரிவிக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். கள்ள ஓட்டை தடுக்க முயன்ற வாக்குப் பதிவு மைய அதிகாரியின் காலை வெட்டுவேன் என்று சிபிஎம் எம்எல்ஏ மிரட்டியதாக வெளியான தகவல் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து உடனடியாக விளக்கம் அளிக்க காசர்கோடு மாவட்ட கலெக்டருக்கு கேரள தலைமைத் தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

You'r reading காலை வெட்டுவேன் கள்ள ஓட்டை தடுத்த அதிகாரிக்கு மிரட்டல் விடுத்த எம்எல்ஏ Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை