சாக்கடை ஜலம் சசிகலா.. துக்ளக் குருமூர்த்தி மீண்டும் சர்ச்சைப் பேச்சு..

by எஸ். எம். கணபதி, Jan 15, 2021, 10:18 AM IST

சசிகலாவைச் சாக்கடை ஜலம் என்று துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி ஒப்புமைப்படுத்திப் பேசியது சசிகலா ஆதரவாளர்களுக்கு கடும் கோபத்தை ஊட்டியுள்ளது.துக்ளக் இதழின் 51-வது ஆண்டுவிழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால், அவருக்கு வேறு முக்கியப் பணிகள் இருந்ததால், அவருக்குப் பதிலாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கலந்து கொண்டார். இந்த விழாவில் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி பேசியதாவது:ஊழலில் அதிமுக, திமுக ஆகிய 2 கட்சிகளுக்கும் இடையே எந்த வித்தியாசமும் இல்லை. ஒன்று குடும்பத்து ஊழல். இன்னொன்று, கூட்டுக் கொள்ளை. அதனால் ஊழலைப் பற்றிப் பேச இவர்களுக்குத் தகுதியில்லை.

அதிமுக ஊழல்களைப் பற்றி ஸ்டாலின் கவர்னரிடம் மனு கொடுக்கிறார். அவருடன் ஆ.ராசாவும் போயிருக்கிறார். அந்த புனிதரை அருகில் வைத்துக் கொண்டு ஊழல் பற்றிப் பேசலாமா?திராவிடக் கட்சிகளால்தான் ஜாதிக் கட்சிகளே தோன்றின. 1982ல் ஜாதிவாரியாகக் கணக்கெடுப்பு நடத்த எம்ஜிஆர் முடிவு செய்து, எல்லா ஜாதியினரையும் அழைத்துக் கேட்டார். அப்போது அவர்கள் கேட்டபடி பார்த்தால் 300 சதவீதம் இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டியிருந்ததாம்.

இப்போது முக்கிய விஷயம் கந்தசஷ்டி கவசம். எல்.முருகன் வேல் யாத்திரையை நடத்தியதால் பாஜக வளர்ந்திருக்கிறது. வேறு கட்சிகள் யாரும் இதைக் கையில் எடுக்காதது பாஜகவுக்கு அதிர்ஷ்டம். சிறுபான்மையினர் தாஜா அரசியலால் தமிழகத்தில் தீவிரவாதம் அதிகரித்துள்ளது. ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் தொடர்புடையவர்கள் 127 பேரில் 33 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். அதிமுக அரசாங்கம் இந்த கொரோனா காலத்தில் நன்றாகச் செயல்பட்டது. எடப்பாடி பழனிசாமி இரவு பகலாக வேலை பார்த்தார். ஆனால், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை அதிமுக அரசு பழிவாங்கியது. அதற்காக இந்த அரசு அவமானப்பட வேண்டிய காலம் வரும். கடந்த 1987-88ம் ஆண்டு காலகட்டத்தில் ராஜீவ்காந்தி அரசை கவிழ்ப்பதற்காக நாங்கள் பல முயற்சி மேற்கொண்டோம். அப்போது சந்திர சுவாமி ஒரு கில்லாடி சாமியார் இருந்தார். அவர் பல வழக்குகளில் சிக்கியவர். அவரிடம் நாங்கள் ராஜீவ்காந்தி பற்றிய தகவல்களைக் கேட்டு வாங்கினோம். அவரது உதவிகளை பயன்படுத்திக் கொண்டோம். அப்போது பலரும் அருண்ஷோரியிடம் போய் கேட்டனர்.

தூய்மையான அரசியல் பற்றி பேசும் நீங்கள், சந்திரசுவாமியிடம் உதவி கேட்கிறீர்களே? என்று கேட்டனர். அதற்கு அவர் சொன்ன பதிலைத்தான் இப்போது நான் திமுகவை வீழ்த்துவதற்காகச் சொல்லப் போகிறேன்.வீடு பற்றி எரிகிறது. கங்கை ஜலத்திற்காகக் காத்திருக்க முடியாது. சாக்கடை ஜலத்தைக் கூட வாரி வீச வேண்டும் என்று அருண் ஷோரி சொன்னா். அதனால திமுகவை வீழ்த்த சசிகலாவாக இருந்தாலும் சரி, வேறு யாராக இருந்தாலும் சரி. நாம் அவர்களையும் அணி சேர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு அணி உருவாகும் போது அப்படி போயாக வேண்டும்.இவ்வாறு குருமூர்த்தி பேசியிருக்கிறார்.

ஏற்கனவே அவர் ஒரு முறை பேசும்போது, ஓ.பன்னீர்செல்வத்திடம் நீயெல்லாம் ஒரு ஆம்பிளையா என்று கேட்டேன் எனக் குறிப்பிட்டிருந்தார். அப்போதே அதிமுகவினர் கொதிப்படைந்தனர். அமைச்சர் ஜெயக்குமார் உள்படப் பலர் குருமூர்த்திக்குக் கண்டனம் தெரிவித்திருந்தனர். இப்போது சசிகலாவைச் சாக்கடை ஜலம் என்று ஒப்பிட்டு குருமூர்த்தி பேசியிருப்பது சசிகலாவின் தீவிர ஆதரவாளர்களை கடும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக, டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க. கட்சியைச் சேர்ந்தவர்கள் கொதிப்படைந்துள்ளனர்.

You'r reading சாக்கடை ஜலம் சசிகலா.. துக்ளக் குருமூர்த்தி மீண்டும் சர்ச்சைப் பேச்சு.. Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை