பிரபல பெண் பத்திரிகையாளர் ராணா அயூப்பின் புகைப்படத்தை தவறாக சித்தரித்தும் அவரது முகவரியை டுவிட்டர் இணையத்திலும் மர்ம நபர் வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் கோப்புகள் என்ற நூலை எழுதியதன் மூலம் குஜராத் மாநிலத்தில் நரேந்திர மோடி முதலமைச்சராக இருந்த காலத்தில் சுமார் ஈராயிரம் முஸ்லிம்கள் கொத்து கொத்தாகக் கொல்லப்பட்ட நிகழ்வுகளை அரங்கேற்றிய கொடூரமான கயவர்களையே பேட்டி கண்டு வெளிச்சத்திற்கு கொண்டு வந்தவர் பத்திரிகையாளர் ராணா அயூப்.
இதற்காக இவர் சமீபத்தில் ‘அவுட்லுக் சோசியல் மீடியா யூத் ஐகான் ஆப் தி இயர்’ என்ற விருது வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டார். இவரைக் குறிவைத்துத் தாக்க வேண்டும் என்கிற நோக்கத்துடன் போலி ட்விட்டர் கணக்கு உருவாக்கி, அவர் குழந்தை வன்புணர்வு நபர்களைப் பாதுகாக்கிறார் என்றும், இந்தியாவில் முஸ்லிம்கள் பாதுகாப்பாக இல்லை என்று கூறியும் போலியாக செய்திகளை மர்ம நபர் ஒருவர் வெளியிட்டுள்ளான்.
அவரது படத்தை சிதைத்து இழிவுபடுத்தி, ஆபாச வீடியோக்களையும் சுற்றுக்கு விட்டுள்ளான். அவரை மக்கள் வன்புணர்வுக்கு உள்ளாக்க வேண்டும் என்றும் தூண்டியிருக்கிறான். அவரது முகவரியையும், தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்களையும் இணையத்தில் பதிவேற்றம் செய்திருக்கிறான்.
பெண் ஊடகவியலாளர்கள் மீது ஆபாசமான முறையில் இத்தகு தாக்கு தல்கள் தொடுக்கப்படுவது அதிகரித்து வருவதை தில்லி பத்திரிகையாளர் சங்கம் ஆழ்ந்த கவலையுடன் பார்க்கிறது. இது தொடர்பாக ராணா அயூப், இணையக் குற்றப்பிரிவு காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.