கர்நாடகாவில், ஆட்சி அமைக்க பாஜக மற்றும் காங்கிரஸ் இடையில் போட்டாபோட்டி நடந்து வரும் நிலையில், குதிரைபேரங்களும் அரங்கேற ஆரம்பித்துள்ளன.
கடந்த 12-ம் தேதி கர்நாடக மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. காங்கிரஸ் மற்றும் பாஜக-வுக்கு இடையில் நேரடி போட்டி இருந்தாலும், மதச்சார்பற்ற ஜனதாதள கட்சிக்கும் குறிப்பிடத்தக்க செல்வாக்கு இருந்தது.
இதனால், மும்முனை போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 222 தொகுதிகளுக்கும் முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டன. பாஜக 104 தொகுதிகளிலும், காங்கிரஸ் 78 தொகுதிகளிலும், மஜத 37 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
எந்தவொரு கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், காங்கிரஸ்-மஜத கூட்டணி வைத்துள்ளன. அதே நேரத்தில் சற்று முன்னர் அம்மாநில கவர்னரைச் சந்தித்த எடியூரப்பா, `நான் நாளை முதல்வராக பொறுப்பேற்பேன்’ என்று சவால் விட்டுள்ளார். நிலைமை இப்படி போய்க்கொண்டிருக்கையில், காங்கிரஸ் மற்றும் மஜத கட்சி எம்.எல்.ஏ-க்களை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது பாஜக.
இதற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த மஜத கட்சியின் சட்டமன்றத் தலைவர் குமாரசாமி, `பாஜக-வைப் போன்று ஜனநாயகத்தையும் அரசியல் சட்ட சாசனத்தையும் இந்த நாட்டில் எவரும் குழி தோண்டி புதைத்ததில்லை.
அவர்கள் குதிரைபேரம் மூலம் எங்கள் பக்கம் இருந்த ஒருவரை இழுக்க நினைத்தால், நாங்கள் அவர்கள் பக்கமிருந்து இருவரை இழுத்து விடுவோம்’ என்று வெளிப்படையாகவே மிரட்டல் விடுத்துள்ளார். இந்நிலையில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய எம்.பி.பாட்டில், `காங்கிரஸ் மற்றும் மஜத எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் ஒன்றாகத்தான் இருக்கிறோம்.
கட்சி மாறிவிட்டோம் என்று வரும் வதந்திகள் போலியானவை. உண்மையை சொல்லப்போனால், 6 பாஜக எம்.எல்.ஏ-க்கள் எங்களுடன் தொடர்பில் இருக்கிறார்கள்’ என்று கூறி அதிர்ச்சி கிளப்பியுள்ளார். `கர்நாடக மீடியாவும் கூவத்தூருக்கு சீக்கிரமே புறப்படும் நேரம் வெகு தொலைவில் இல்லை…’