முன்னாள் பிரதமரும், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான வாஜ்பாய், டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர், மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில், இன்று எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
வழக்கமான உடல் பரிசோதனைக்காக அவர் அனுமதிக்கப் பட்டுள்ளதாகவும், மருத்துவமனை இயக்குநர் ரன்தீப் குலோரியாவின் மேற்பார்வையில், சிகிச்சை பெற்று வருவதாகவும், மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்று, வாஜ்பாயின் உடல்நலம் விசாரித்தார். இதேபோல, பிரதமர் நரேந்திர மோடியும் வாஜ்பாயை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர், வாஜ்பாயின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
93 வயதான வாஜ்பாய், 1996-2004 வரை இரு முறை பிரதமர் பதவி வகித்தார். 50 வருட நாடாளுமன்ற உறுப்பினரான இவர் மக்களவைக்கு 9 முறையும் மாநிலங்களவைக்கு 2 முறையும் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார்.
2001 ஆம் ஆண்டு மும்பையில் உள்ள மருத்துவமனையில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். 2009 ஆம் ஆண்டு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட வாஜ்பாய்க்கும் பேசும் திறன் குறைந்தது.
இதனைத் தொடர்ந்து, அரசியலில் இருந்து அவர் விலகியே இருக்கிறார். இந்தியாவின் உயரிய, பாரத் ரத்னா விருதினை, கடந்த 2015ஆம் ஆண்டு, குடியரசுத் தலைவரும் மற்றும் பிரதமரும், வாஜ்பாயின் இல்லம் சென்று வழங்கி கௌரவித்தனர்.