மழை வெள்ளத்தால் பாதைகள் கடும் சேதத்தை சந்தித்துள்ள நிலையில், ஓணம் பூஜைக்காக பக்தர்கள் கோவிலுக்கு வரவேண்டாம் என்று சபரிமலை ஐயப்பன் கோவில் நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.
வரலாறு காணாத பேய் மழையால் கேரளா மாநிலமே வெள்ளக்காடானது. இந்த பேரழிவில் சிக்கி சுமார் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கேரளாவில் தற்போது மழை நின்றுள்ள நிலையில், சில மாவட்டங்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. ஆனால், ஆறுகளில் இன்னமும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
ஓணம் பண்டிகை 24ம் தேதி கொண்டாடப்படும் நிலையில், இதை முன்னிட்டு வரும் 23ம் தேதி முதல் 28ம் தேதி வரை சபரிமலை ஐயப்பன் கோவில் திறக்கப்பட உள்ளது. இந்த நாட்களில் ஓணம் பண்டிகைக்காக சிறப்பு பூஜைகள் செய்யப்பட உள்ளது.
ஆண்டுதோறும் ஓணம் பூஜையின்போது திரளான பக்தர்கள் கூட்டம் இருக்கும். ஆனால், தற்போது பெய்த கனமழையால் பம்பை ஆற்றில் தண்ணீர் அதிகளவில் இருப்பதாலும், மலைப்பாதையில் மரங்கள் விழுந்து பாதைகள் கடுமையாக சேதமடைந்துள்ளதாலும் பக்தர்கள் கோவிலுக்கு வர வேண்டாம் என்று சபரிமலை ஐயப்பன் கோவில் நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.