மும்பை காவல்துறை ஒரு டுவிட்டர் கணக்கை வைத்துள்ளது. அதில் ஆகஸ்ட் 20ம் தேதி 22 நிமிடம் ஓடக்கூடிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.ஹ
வேடிக்கையான அந்த வீடியோவை இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் 'லைக்' செய்துள்ளனர். எழுநூறுக்கும் மேற்பட்டோர் ரீடுவிட் செய்துள்ளனர்.
கடை ஒன்றில் பதிவான வீடியோ அது. கடையில் கூட்டமாக இருக்கிறது. மக்கள் வரிசையில் நிற்கின்றனர். சாம்பல் நிறத்தில் தலையை மறைக்கும்வண்ணம் உடையணிந்த ஒரு மனிதன் காணப்படுகிறான். வரிசையில் நிற்கும் அவன், முன்னால் நிற்பவரின் பர்ஸை திருடுகிறான். திருடிய பர்ஸை தன் பாக்கெட்டில் போடுவதற்கு முன்பு, கடையில் இருக்கும் கண்காணிப்பு கேமிராவை கவனிக்கிறான்.
அது அவன் நிற்குமிடத்திற்கு நேராக இருப்பதை பார்த்ததும், அசட்டு புன்னகை உதிர்க்கிறான். பின்பு, கீழே கிடந்த பர்ஸை எடுத்துக் கொடுப்பதுபோல நடித்தவன், பர்ஸின் சொந்தக்காரரிடம் அதை கொடுத்துவிட்டு, கைக்குலுக்குகிறான்.
வீடியோ வேடிக்கையாக இருந்தாலும் 'நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள்' என்ற செய்தியை அது அனைவருக்கும் கொண்டு சேர்க்கிறது. தாமாக திருந்தாத திருடர்களையும் கண்காணிப்பு கேமிராக்கள் திருத்திவிடும்!