மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவில், மீள்குடி மறு கட்டமைப்பு பணிகள் சவாலாக இருப்பதால் மத்திய அரசு அதிக நிதி ஒதுக்க வேண்டும் என கேரள அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவில் மேற்கொள்ள வேண்டிய மீள் குடியமர்த்தல் மற்றும் மறு கட்டமைப்பு குறித்து, சட்டப்பேரவையின் ஒரு நாள் சிறப்புக் கூட்டம் இன்று நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் பினராயி விஜயன், மழை வெள்ளத்துக்கு 483 பேர் பலியாகி உள்ளதாகவும், 14 பேர் மாயமாகி உள்ளதாகவும் தெரிவித்தார். படுகாயமடைந்த 140 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், 59 ஆயிரத்து 296 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளதாகவும் கூறினார்.
இதுபோல, மீள் குடியமர்த்தல் மற்றும் மறுகட்டமைப்பு பணி சவாலானது எனவும் இதற்காக மத்திய அரசிடம் அதிக நிதியை எதிர்பார்ப்பதாகவும் கூறினார். உலக வங்கி உள்பட பலர் உதவ முன் வருவதை, மாநில அரசின் கொள்கை வரவேற்பதாகவும் பினராயி விஜயன் தெரிவித்தார் .
புதிதாக கட்டமைக்கும் பணியில் கேரளாவை சேர்ந்த அயல்நாடுகளில் வாழும் மக்கள் மற்றும் லோக கேரள அமைப்பை இணைப்பது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். மாநிலம் பொருளாதார தேக்க நிலையில் சிக்கி உள்ளதாகவும் பினராயி விஜயன் தெரிவித்தார்.
மீட்புப் பணிகள் வெற்றி பெற மீனவர்களின் பங்களிப்பு முக்கிய திருப்பமாக அமைந்ததாகவும் அவர் தெரிவித்தார். இதனிடையே அணை நிர்வாகத்தில் ஏற்பட்ட மனித தவறே பேரழிவுக்கு காரணம் என்றும், சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் எம்.எல்.ஏ. வி.எஸ்.சதீசன் வலியுறுத்தி உள்ளார்.