வங்கிச் சேவை, பான் கார்டு, செல்போன் சேவை, பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ் உள்ளிட்டவற்றை பெறுவதற்கு மத்திய அரசு ஆதாரை கட்டாயமாக்கியுள்ளது. இதனை எதிர்த்து 31 பேர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
பயோமெட்ரிக் தகவல்கள், கைரேகை, கண் விழித்திரை தகவல்கள் உள்ளிட்டவை அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கு கட்டாயம் அல்ல என்றும் இதன் மூலம் தகவல் திருடப்படுவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் மனுதாரர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்த வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. " சிறந்ததாக இருப்பதை விட தனித்துவமாக இருப்பதே மேல். ஆதார் அட்டை அரசியல் சாசனத்திற்கு உட்பட்டது. எந்த வகையிலும் ஆதார் எண்ணை போலியாக உருவாக்க முடியாது."
"மற்ற அடையாள அட்டைகளில் இருந்த ஆதார் வேறுபட்டது. ஆதார் ஒருவரின் கையெழுத்தை கூட மாற்றலாம்; ஆனால் கைரேகையை மாற்ற முடியாது. தனியார் நிறுவனங்கள் ஆதாரை கேட்க முடியாது. தேச பாதுகாப்புக்கு மட்டுமே ஆதாரை பயன்படுத்த வேண்டும். ஆதார் தரவுகளை பாதுகாக்க சட்டத்தை கடுமையாக்க வேண்டும்"
"தனியார் அமைப்புகள் ஆதார் விவரங்களை கோருவதற்கான சட்டப்பிரிவு 57 நீக்கம். அதேபோல் பிரிவு 49ஆம் நீக்கப்பட்டதால், தனி மனிதர்கள் ஆதார் தொடர்பான புகார்களை முன்னெடுக்க முடியும்."
"பான் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம். யுஜிசி, நீட், சிபிஎஸ்இ உள்ளிட்ட தேர்வுகளுக்கு ஆதார் அட்டை அவசியம். நீதிமன்ற அனுமதியின்றி பிற நிறுவனங்களுக்கு கைரேகை விவரங்களை பகிரக் கூடாது" ஆதார் வழக்கில் உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது.