ஜார்க்கண்ட் மாநிலத்தில் காட்டுயானைக் கூட்டம் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்தன.
மாவோயிஸ்ட் ஆதிக்கம் அதிகம் உள்ள ஜார்க்கண்ட் மாநிலத்தில் பெரும்பாலான இடங்கள் வனப்பகுதியாக உள்ளன. அங்கு பெரிய தொழிற்சாலைகள் இல்லாததால், அங்குள்ளவர்கள் விவசாயத்தை நம்பி வாழ்கின்றனர்.
தற்போது, ஜார்க்கண்டில் நல்ல மழை பெய்துள்ளதால், வனப்பகுதியையொட்டியுள்ள குந்தி மாவட்டத்தில், விவசாயிகள் நெல் நடவு செய்துள்ளனர். நெற் பயிர்கள் பால் பிடிக்கும் தருவாயில் உள்ளது. இந்த வாசனையால் சுண்டிழுக்கப்பட்ட காட்டுயானைக் கூட்டம் ஊருக்குள் புகுந்தன.
சுமார் 12க்கும் மேற்பட்ட யானைகள் வனப்பகுதியில் இருந்து கிராமத்திற்குள் நுழைந்தன. பொதுமக்கள் மற்றும் வனத்துறையினர் பட்டாசு வெடித்தும், அதிக சத்தம் எழுப்பியும் யானைக் கூட்டத்தை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டினர்.
ஆனால், யானைக் கூட்டம் வயல்வெளிகளில் இறங்கி நெற் பயிர்களை, தின்றும், மிதித்தும் நாசம் செய்தன. அதிக சத்தத்தை கேட்டு மிரண்ட யானைகள் அங்கும் இங்கும் அலைந்து திரிந்தன.
யானைகளால் சேதம் அடைந்த நெற்பயிர்களின் சேத மதிப்பை கணக்கீடு செய்து, உரிய இழப்பீடு தொகை வழங்க ஜார்க்கண்ட் அரசு முன்வர வேண்டும் என குந்தி விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.