வங்க கடலில் உருவாகியுள்ள நிவர் என்ற புயல் தமிழகம் மற்றும் புதுவையில் நாளை (நவம்பர் 25) கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை தொடர்ந்து தமிழகம் மற்றும் புதுவை அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. அதன்படி புதன்கிழமை அவசர மற்றும் இன்றியமையாத பணிகள் தவிர மற்ற அனைத்து அலுவலகங்களுக்கும் பொது விடுமுறையை தமிழக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். சென்னையில் இயங்கி வரும் புறநகர் ரயில்கள் புதன்கிழமை காலை 10 மணியிலிருந்து மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கும் அங்கிருந்து சென்னைக்கும் வரும் சென்னை - எழும்பூர் தேஜாஸ் (இரு மார்க்கம்), மதுரை - சென்னை எழும்பூர் வைகை விரைவு வண்டி (இரு மார்க்கம்), சென்னை எழும்பூர் - காரைக்குடி விரைவு ரயில் (இருமார்க்கம்), சென்னை எழும்பூர் - செங்கோட்டை ரயில் (இரு மார்க்கம்), சென்னை எழும்பூர் - திருநெல்வேலி விரைவு ரயில் (இரு மார்க்கம்), சென்னை எழும்பூர் - தூத்துக்குடி விரைவு ரயில் (இரு மார்க்கம்), சென்னை எழும்பூர் - கன்னியாகுமரி (இரு மார்க்கம்), சென்னை எழும்பூர் - கொல்லம் ரயில் (இரு மார்க்கம்) ஆகிய ரயில்கள் புதன்கிழமையன்று ரத்து செய்யப்பட்டுள்ன. புதுச்சேரியில் இன்று (செவ்வாய்) இரவு 9 மணி முதல் வியாழன் காலை 6 மணி வரை 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் பால் மற்றும் பெட்ரோல் நிலையங்கள், மருந்து கடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் மட்டும் திறந்திருக்கும்.