டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் பங்கேற்பதற்கான வயது உச்சவரம்பை உயர்த்தி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப்-1 தேர்வு மூலம் வருவாய் கோட்டாட்சியர் (துணை ஆட்சியர்), காவல்துறை துணை கண்காணிப்பாளர் (கிரேடு-1) வணிகவரி உதவி ஆணையர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் உள்ளிட்ட 8 விதமான உயர் பதவிகள் நேரடியாக நிரப்பப்படுகின்றன. இதனால் குரூப்-1 தேர்வுக்கு இளைஞர்கள் மத்தியில் எப்போதும் மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கும்.
ஆந்திரா, கேரளா, குஜராத், பிஹார் உள்ளிட்ட மாநிலங்களில் குரூப்-1 தேர்வுக்கான வயது வரம்பு 39, 38, 45, 45 என்ற அளவில் உள்ளன. இதேபோல் தமிழகத்திலும் குரூப் 1தேர்வுக்கான வயது உச்சவரம்பை உயர்த்த வேண்டும் என இளைஞர்கள் கோரிக்கை விடுத்தனர்.
அவர்களின் கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு, வயது உச்சவரம்பை உயர்த்தியுள்ளது. சட்டப்பேரவை விதி எண் 110ன் கீழ், இதற்கான அறிவிப்பை முதலமைச்சர் வெளியிட்டார்.
எஸ்.சி.,எஸ்.டி., எம்.பி.சி.,பி.சி.,டி.என்.சி ஆகிய பிரிவுகளுக்கான வயது வரம்பு 35-லிருந்து 37-ஆகவும், இதர பிரிவினருக்கான வயது வரம்பு 30-லிருந்து 32ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.