“பொருளாதார வலிமை இல்லாத நாடுகள், பணக்கார நாடுகளோடு போட்டிப் போட முடியாதததால் புது வகையான அடிமைத்தன காலனிய சூழ்நிலை உருவாகிறதை நாங்கள் விரும்பவில்லை,” என்று சீனாவில் உரையாற்றும்போது மலேசிய பிரதமர் மஹாதிர் முகமது கூறியுள்ளார்.
மலேசியா, சீன நிறுவனங்களிடம் வைத்துள்ள 250 பில்லியன் டாலர் கடனை தீர்ப்பதையே முதன்மை நோக்கமாக கொண்டு சீனாவுக்கு ஐந்து நாள் பயணம் மேற்கொள்ள தீர்மானித்தார் மலேசிய பிரதமர்.
உலக அளவில் முக்கியமான சரக்கு கப்பல் பாதையில், விமானம் தாங்கி கப்பல்களை நிறுத்துமளவுக்கு ஆழ்கடல் துறைமுகம் அமைக்கும் பணியில் சீன தேசத்து ஆற்றல் நிறுவனம் ஒன்று முதலீடு செய்துள்ளது. வர்த்தகம் நிறைந்த தென்சீன கடலில் துறைமுகத்தை புதுப்பிக்கும் பணியினை சீன அரசு நிறுவனம் ஒன்று செய்து வருகிறது.
வர்த்தக நோக்கம் கொண்ட பட்டுப் பாதையுடன் சரக்குகளை விரைவாக கொண்டு செல்ல வசதியாக சீன அரசு வங்கி ஒன்று மலேசியாவில் இருப்புப்பாதை அமைக்கும் பணிக்கு நிதி அளித்துள்ளது. 75,000 பேர் வசிக்கத்தக்க நான்கு செயற்கை தீவுகளையும் சீன நிறுவனம் ஒன்று அமைத்து வருகிறது.
இந்தப் பணிகள் தவிர வேறு பணிகளும் மலேசியாவில் நடைபெற்று வருகிறது. கடன் வழங்கியும், திட்டங்களை காட்டியும் முந்தைய பிரதமர் நஜிப் ரஸாக்கை சீனா தனக்கு சாதகமாக வைத்திருந்தது. அவர்பேரில் கூறப்பட்ட லஞ்ச குற்றச்சாட்டுகளில் பெரும்பான்மையானவை சீனாவின் திட்டங்களோடு தொடர்புடையவை. நாடு கடுமையான கடன் சுமையில் சிக்கியிருப்பதால், அதை விடுவிக்கும் நோக்கத்தோடு மக்கள் 93 வயது மஹாதிர் முகமதுவுக்கு வாக்களித்து பிரதமர் பதவியில் அமர்த்தியுள்ளனர்.
தற்போது சீனாவின் உதவியோடு அல்லது சீன நிறுவனங்களால் மலேசியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் பெரிய பணிகள், சீனாவுக்கு பயன்தருபவையே தவிர, சீனாவோடு நட்புறவை பேணுவதை தவிர வேறு எந்த பெரிய பலனையும் மலேசியாவுக்கு தரப்போவதில்லை என்ற கருத்தும் கூறப்படுகிறது.
கடனை தீர்ப்பதே முக்கியம் என்று கருதும் மஹாதிர் முகமது, சீனாவின் பெருந்திட்டங்களை இனி மலேசியா தலைகீழாக நின்று நிறைவேற்றப்போவதில்லை என்பதை நாசூக்காக வெளிப்படுத்தியுள்ளார்.