மனிதர்கள் இறந்துவிட்டால், எரிப்பதையோ அல்லது புதைப்பதையோ வழக்கமாக கொண்டுள்ளனர். சில உடல்கள் மருத்துவ ஆராய்ச்சிக்காக பதப்படுத்தி மருத்துவ மாணவர்களுக்கு சிறிது காலம் வகுப்பெடுக்கவோ அல்லது ஆய்வு செய்யவோ பயன்படுகிறது. அந்த உடல்களையும் கொஞ்ச காலத்தில் ஏதோ ஒரு வகையில் அழித்து விடுவது வழக்கம்.
ஆனால், பிளாஸ்டினேஷன் எனும் முறையில், இறந்த உடலின் உட்பகுதியை என்றுமே அழியாத வண்ணம் பதப்படுத்த முடியும். மேலும், பதப்படுத்திய அவ்வுடல்களை மியூசங்களிலும், மருத்துவ ஆய்வுகளுக்கும் பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.
பிளாஸ்டினேஷன் என்றால் என்ன?
முதலில் Plastination என்றால் என்ன என்பதை நாம் அறிந்து கொள்வோம். உடலை அழுக விடும் தண்ணீர் மற்றும் கொழுப்பு பகுதிகளை உடலில் இருந்து அகற்றி, அதற்கு மாற்றாக பிளாஸ்டிக் கலவைகளை பொருத்தி எப்போதுமே கெடாத வண்ணம் பதப்படுத்துதலே பிளாஸ்டினேஷன் ஆகும். இதில், மனிதர்களின் தோல் பகுதி காட்சிப்படுத்தப்படாது. அவர்களின் தசைநார் பகுதிகள் கலந்த உட்புற உருவ அமைப்பு மட்டுமே இந்த முறையில் பதப்படுத்த முடியும். மனித உடலின் உட்புற அமைப்புகள் எவ்வாறு செயல்படுகிறது என்பதை இதன் மூலம் அறிய முடியுமாம்.
பிளாஸ்டினேஷனின் வரலாறு:
ஜெர்மன் நாட்டில் 1945ம் ஆண்டு ஜனவரி 10ஆம் தேதி பிறந்தவர் கன்தர் வோன் ஹேகன்ஸ். இவர் ஹெய்டல்பர்க்ஸ் பல்கலைக் கழகத்தில் நோயியல் மற்றும் உடற்கூறியல் பிரிவில் ஆராய்ச்சி செய்து வந்தார்.
1977ஆம் ஆண்டு, ஜூலை மாதம் உடல் அழுகுவதை தவிர்க்க பிளாஸ்டிக்கின் உதவிக் கொண்டு பிளாஸ்டினேஷன் எனும் உடலை பதப்படுத்தும் முறையை கண்டறிந்தார். வெற்றிட-உட்புகுத்துகை எனும் அறிவியல் கருத்தை கண்டறிந்ததன் பலனாக ரெசின், சிலிக்கான், ரப்பர் மற்றும் பிளாஸ்டிக்குகளை வைத்து உடலினை பதப்படுத்தினார். பின்னர் அதற்கு பிளாஸ்டினேஷன் எனப் பெயரிட்டார்.
தற்போது, உலகம் முழுவதும் 400 மருத்துவ பள்ளிகள் மற்றும் பல்கலைக் கழகங்களில் இந்த பிளாஸ்டினேஷன் முறை பயன்படுத்தப்பட்டு வருகிறது.
முதல் முழு பிளாஸ்டினேட் உடல் கண்காட்சி ஜப்பானில், 1995ம் ஆண்டு நடத்தப்பட்டது.
முதன் முதலாக பிளாஸ்டினேட் செய்யப்பட்ட உடல் 13 ஆண்டுகள் நிலையில், இன்றும் அழுகாமல் ஜப்பான் மியூசியத்தில் காட்சிப்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
கன்தர் வோன் ஹேகன்சின் ஆசை:
பிளாஸ்டினேஷன் எனும் முறையை உருவாக்கிய கன்தர் வோன் ஹேகன்சினுக்கு தற்போது 73 வயதாகிறது. மேலும், பர்கின்சன் நோயினால் அவர் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால், தனது பேச்சு தடுமாற்றம் அடைவதாகவும், பொதுவெளியில் பேசுவதை நிறுத்திவிட்டதாகவும் அவர் தெரிவித்தார். தான் உயிர் நீத்த பிறகு, தனது உடலையும் பிளாஸ்டினேஷன் செய்து வைக்கவேண்டும் எனும் தனது கடைசி ஆசையை கன்தர் கூறியுள்ளார்.
உலகில் உள்ள அத்தனை மனிதர்களையும் இந்த முறையில் பதப்படுத்த முடியாது. ஆனாலும், எலும்புகளுக்கு போட்டியாக சில முழு உருவ உடல்களும், பல யுகங்களை தாண்டி வாழ்வது மருத்துவ உலகு, மற்றும் மனித அறிவின் மிகப்பெரிய சாதனை என்பதில் சந்தேகமே இல்லை!