அரை நூற்றாண்டுக்கும் மேலாக குஜராத் அருங்காட்சியகத்தில் சிறை வைக்கப்பட்டிருந்த ராஜராஜ சோழன் - உலகமாதேவி சிலைகளை மீட்டு சரித்திர சாதனை படைத்து தமிழ்நாட்டு மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியவர் ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் .
இவர் எஸ்.பி-யாக இருந்த காலகட்டத்தில் காவல்நிலையங்களில் பொதுமக்கள் மிகவும் மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும் என்பதில் தீவிர கவனம் செலுத்தினார். காவல்நிலையங்களுக்கு வரும் பொதுமக்களை நாற்காலியில் உட்காரச் சொல்லி பேச வேண்டும் எனக் கண்டிப்புடன் உத்தரவு போட்டார். குற்றங்களை விரைவாகக் கண்டுபிடித்து வழக்குகளைச் சீக்கிரமாக முடிக்க வேண்டும் என்பதிலும் கவனம் செலுத்தக்கூடியவர். மக்களிடம் தவறாக நடந்துகொள்ளக்கூடிய காவல்துறை அதிகாரிகள்மீது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடியவர்.
அதேசமயம் தன்கீழ் பணியாற்றும் நேர்மையான அதிகாரிகளிடம் மிகவும் மனித நேயத்துடனும் நடந்துகொள்வார். ரயில்வே துறையிலும் தனது ஆக்கபூர்வமான செயல்பாடுகளால் பொதுமக்களை வெகுவாகக் கவர்ந்துள்ளார். இவர் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி-யாக பொறுப்பேற்ற பின்புதான், இதற்கு முன்பு தமிழ்நாட்டில் நிகழ்ந்த ஏராளமான சிலை கடத்தல்கள் வெளிச்சத்துக்குக் கொண்டு வரப்பட்டன. கடவுள் சிலை செய்ததில் நடந்த முறைகேடுகளும் கண்டுப்பிடிக்கப்பட்டன.
பெண்கள் பாதுகாப்பு பற்றி அக்கறை கொண்டவர். பெண்களுக்கு போலீஸை விட முதல் பாதுகாப்பு பெற்றோர் தான் எனக் கூறுபவர்.
தமிழக காவல் துறையில் சிலைகடத்தல் பிரிவு ஒரு சிறிய குழு. இருப்பினும் அந்த குழுவை வைத்துக்கொண்டு பல ஆச்சர்யங்களை நிகழ்த்தினார் பொன் மாணிக்கவேல். எத்தனை லட்சம் கோடிரூபாய் மதிப்புள்ள தமிழக கலைச்செல்வங்கள் கொள்ளை போயுள்ளன என்பது இவர் அந்தப்பதவிக்கு வந்தபின்பே தெரியவந்துள்ளது. சிலைகடத்தல் விசாரணையில் முக்கிய அரசியல் புள்ளிகள் சிலர் பெயரை அவர் வெளியிட்டு இருந்ததால், சம்பந்தப்பட்ட சில அரசியல் சக்திகள் பணியிட மாற்றம் செய்ய முனைந்ததாக செய்திகள் உலாவந்தன.
பல ஆண்டுகளுக்கு முன் காவல்துறையினர் தற்கொலை என முடித்த வழக்கை இது தற்கொலை அல்ல, கொலை என்பதை கண்டறிந்தார். அதற்கு சாட்சி கூற மாவட்ட ஆட்சியரை நீதிமன்றத்திற்கு அழைத்த போது ஆட்சி அதிகாரத்தில் இருந்த மாவட்ட ஆட்சியரே பயந்து தயக்கம் காட்டினார். பின்னர் துணை ஆட்சியர் நீதிமன்றத்தில் அளித்த சாட்சி அடிப்படையில் குற்றவாளி இன்றும் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். இந்த சம்பவம் அறிந்த அப்போதைய காவல் துறை ஐ.ஜி உடனடியாக தொலைபேசியில் தொடர்புகொண்டு "ஆட்டை கடித்து, மாட்டை கடித்து, மாவட்ட ஆட்சியரையே கடித்து விட்டாயே" எனக் கேட்டார் என்று தனது பணிக்கால சுவாரசியமான விஷயங்களை இன்று நடந்த பிரியாவிடை நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டார்.
ஐஜி பொன்.மாணிக்கவேல் செய்த சாதனைகள் இன்னும் வெளிவராத நிலையிலே உள்ளது. மாமன்னன் ராஜராஜன் - உலகமாதேவி சிலைகள் மீட்கப்பட்டு மீண்டும் பெரியக்கோயிலில் வைக்கப்படுவதென்பது, கற்பனை செய்துகூட பார்க்க முடியாத சரித்திரச் சாதனையாகவே போற்றப்படுகிறது.