இந்திய பேட்ஸ்மேன்களின் சொதப்பலான ஆட்டத்தால், 5வது ஒருநாள் போட்டியில் 35 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரையும் ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இதில், ஹைதராபாத் மற்றும் நாக்பூரில் நடந்த முதல் இரண்டு போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றது. ராஞ்சி மற்றும் மொகாலி போட்டிகளில் ஆஸ்திரேலியா வென்றது.
தொடரை நிர்ணயிக்கும் 5ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி, டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் இன்று நடந்தது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, முதலில் பேட்டிங் செய்தது.
அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் கவாஜா 100 (106), பின்ச் 27 (43) ரன்களுக்கு வெளியேறினர். ஹேண்ட்ஸ்கோம்ப் அரை சதம் அடித்தார். 50 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா, 9 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்கள் எடுத்தது.
பின்னர் விளையாடிய இந்திய அணியில், பேட்ஸ்மேன்கள் சொதப்பினர். அதிகபட்சமாக, தொடக்க வீரர் ரோஹித் சர்மா, 56 (89) ரன்கள் எடுத்தார். கேதார் ஜாதவ் 44 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். சிகர் தவான் 12, கோலி 20, ரிஷப் பாண்ட், விஜய் சங்கர் தலா 16 ரன்கள் எடுத்தனர்.
அதேநேரம், கடைசி நேரத்தில் வந்த பந்து வீச்சாளர் புவனேஷ் குமார், மற்றவர்களுக்கு பாடம் கற்பிப்பது போல் சிறப்பாக விளையாடினார். அவர், 54 பந்துகளில் 46 ரன்கள் எடுத்தும், இந்திய அணியின் தோல்வியை தவிர்க்க முடியவில்லை.
இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் இந்திய அணி, 237 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம், 35 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி எளிதாக வெற்றி பெற்று, 3-2 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது.