ஐபிஎல்லின் நேற்றைய ஆட்டத்தில் மும்பை அணியை 37 ரன்கள் வித்தியாசத்தில் வென்று இந்த தொடரை நம்பிக்கையுடன் துவங்கியுள்ளது டெல்லி கேபிட்டல்ஸ். கடந்த 10 சீசன்களுக்காக கடந்த வந்த தோல்வியை இந்த முறை போக்கடிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. நேற்றைய போட்டியில் பேட்டிங்கில் அந்த அணி வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர். குறிப்பாக இளம் வீரர் ரிஷப் பான்ட் அதிரடியாக விளையாடினர். மும்பை பந்துவீச்சாளர்களை திணறடித்த அவர் 18 பந்துகளில் அரை சதம் எடுத்ததுடன் கடைசி ஓவர்களில்பான்ட் சிக்ஸர்கள் மற்றும் பவுண்டரிகளாக விளாசி 27 பந்துகளில் 7 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 78 ரன்கள் குவித்து கடைசி வரை அவுட் ஆகாமல் இருந்தார்.
அவரின் அதிரடியால் தான் மும்பை அணி இமாலய இலக்கை எட்ட முடியாமல் தோல்வியை தழுவியது. இந்த சீசனில் ரிஷப் பான்ட் அச்சமளிக்கக்கூடிய வீரராக வலம் வருவார் என முன்னாள் வீரர்கள் கணித்துள்ளனர். அதற்கு அவரது ஃபார்ம் ஒரு காரணமாக கூறப்படுகிறது. டெல்லி அணி அடுத்து சென்னை அணியுடன் விளையாட உள்ளது. இதிலும் சிஎஸ்கே அணிக்கு கடும் பான்ட் அச்சுறுத்தலாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அது குறித்து கவலைப்படப்போவதில்லை என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் பேசும்போது, 'பான்ட் டின் சிறப்பான ஆட்டத்துக்கு நாங்கள் மதிப்பளிக்கிறோம். ஆனால், அவர் மீது மட்டுமே கவனம் இருக்காது. டெல்லி அணியில் மற்ற வீரர்களும் உள்ளனர். இந்திய அணியில் இடம்பிடிக்கும் இளம் வீரர்களில் ஒருவராக ரிஷப் பான்ட் இருக்கிறார். அதில் எந்த வித சந்தேகமும் இல்லை. டெல்லி அணியில் தவான், இங்கிராம், ஷ்ரேயாஸ் அய்யர் போன்ற மற்ற சிறப்பான வீரர்களும் உள்ளனர். அவர்களின் தவறுகளை கண்டுபிடித்து, அதை சிறப்பாக பயன்படுத்த வேண்டும். எங்கள் கவனம் முழுவதும் எங்கள் பலத்தின் மீது மட்டுமே" எனக் கூறியுள்ளார்.