கிரிக்கெட் வீரர் அஸ்வினின் செயலை பிசிசிஐ அமைப்பு கடுமையாக விமர்சித்துள்ளது.
12-வது ஐபிஎல் சீசன் கடந்த 23-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. பஞ்சாப் அணி, ராஜஸ்தான் அணி இடையேயான போட்டி ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்றது. முதலில் விளையாடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய ராஜஸ்தான் அணி வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பஞ்சாப் அணியின் பந்துவீச்சைப் பறக்கவிட்டார் ஜோஸ் பட்லர். இந்நிலையில் ஜோஸ் பட்லர், அஸ்வினால் `மன்கட் அவுட் (ரன் அவுட்)' செய்யப்பட்ட விதம் ரசிகர்களிடையே பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இது பெரும் சர்ச்சையை கிளப்ப முன்னாள் வீரர்கள் பலரும் அஸ்வினை கடுமையாக விமர்சித்திருந்தனர். அஸ்வின் செயல் ஐபிஎல் விளையாட்டுக்கு நல்லதல்ல என எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த நிலையில் இந்த விவகாரத்தில் பிசிசிஐ கருத்து தெரிவித்துள்ளது. அந்த அமைப்பின் அதிகாரிகள் கூறுகையில், ``அஸ்வினின் இந்த செயல்பாடு தனிப்பட்ட நபரின் புகழைக் கெடுத்துவிடும், விமர்சனங்கள் அவருக்கு சங்கடங்களை ஏற்படுத்திவிடும். ஒரு வீரர் மற்றவரை கிரிக்கெட் திறமையை வைத்து ஏமாற்றலாம், ஆனால், தனது போலியான திறமைகளை வைத்து ஏமாற்றக் கூடாது. ஒருபேட்ஸ்மேன் கிரீஸை விட்டு விலகி முன்னுரிமை எடுத்தால், அதை ஜென்டில்மேன்போல் சரியான வழயில் அணுக வேண்டும். போட்டி என்பது நல்லபடியாக இருக்க வேண்டும், போட்டியில் நாகரீகத்தை கடைபிடிக்க வேண்டும். இதுபோன்று ஆட்டமிழக்கச் செய்வது முதுகில் குத்துவது போன்றதாகும். அதனால்தான் இந்த முறையை நான் தொடர்ந்து விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. இது சரியான அணுகுமுறை அல்ல" என கடுமையாக விமர்சித்துள்ளனர்.