2011ம் ஆண்டுக்கு பிறகு மும்பை அணி சந்தித்த சோதனை - இரண்டாவது வெற்றியை பதிவு செய்த பஞ்சாப்

Punjab won by 8 wkts against mumbai indians

by Sasitharan, Mar 30, 2019, 19:54 PM IST

மும்பை இந்தியன்ஸ் அணியை எட்டு விக்கெட் வித்தியசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வீழ்த்தியுள்ளது.

ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் நடந்த இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் ரவிச்சந்திரன் அஷ்வின் ஃபீல்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் ரோஹித் ஷர்மாவும், குயிண்டன் டி காக்கும் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர். மும்பை அணிக்கு ஓப்பனிங் சிறப்பாக அமைந்தது. இதனால் மும்பை அணி 5 ஓவரில் 50 ரன்னை தொட்டது. அணியின் எண்ணிக்கை 51 ஆக இருக்கும்போது ரோகித் சர்மா 19 பந்தில் 5 பவுண்டரியுடன் 32 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய சூர்யகுமார் யாதவ் 11 ரன்னில் வெளியேறினார்.
மறுபுறம் பொறுப்பாக ஆடிய டி காக் அரை சதமடித்தார். அவர் 39 பந்தில் 2 சிக்சர், 6 பவுண்டரியுடன் 60 ரன்னில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து இறங்கிய யுவராஜ் சிங், 18 ரன்னில் அவுட்டானார். ரோஹித் ஷர்மா, குயிண்டன் டி காக் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் உதவியுடன் 20 ஓவர்களில் மும்பை அணி 7 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. பஞ்சாப் அணி தரப்பில் அதிகபட்சமாக முருகன் அஷ்வின், ஹர்தஸ், ஷமி ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினர். மும்பை அணியில் குயிண்டன் டி காக் 60 ரன்கள் சேர்த்தார்.

177 ரன்கள் எடுத்தால் இரண்டாவது வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் சிறப்பான அடித்தளம் அமைத்துக்கொடுத்தார். மும்பை அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்த அவர், 24 பந்துகளில் 40 ரன்கள் எடுத்திருந்தபோது குர்னால் பாண்டியா ஓவரில் அவுட் ஆகி வெளியேறினார். இதன்பின் வந்த இளம் வீரர் மாயங் அகர்வாலும் தன் பங்குக்கு அதிரடியாக விளையாடினார். வெறும் 21 பந்துகளை மட்டும் பிடித்த நான்கு பவுண்டரி, இரண்டு சிக்ஸர்களுடன் 43 ரன்கள் சேர்த்த நிலையில் வெளியேறினார். இருப்பினும் மறுமுனையில் இருந்த மற்றொரு ஓப்பனிங் வீரர் கேஎல் ராகுல் நிதானமாக விளையாடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார். அதன்படி, 18.4 ஓவர்களிலேயே இலக்கை எட்டி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. மும்பை அணி தரப்பில் குர்னால் பாண்டியா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். 2011ம் ஆண்டுக்கு பிறகு மொஹாலி மைதானத்தில் மும்பை அணி தோற்பது இதுவே முதல் முறையாகும்.

You'r reading 2011ம் ஆண்டுக்கு பிறகு மும்பை அணி சந்தித்த சோதனை - இரண்டாவது வெற்றியை பதிவு செய்த பஞ்சாப் Originally posted on The Subeditor Tamil

More Sports News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை