12-வது ஐபிஎல் சீசன் மார்ச் 23-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. பஞ்சாப் அணி, ராஜஸ்தான் அணி இடையேயான போட்டி ஜெய்ப்பூரில் மார்ச் 26ம் தேதி நடைபெற்றது. முதலில் விளையாடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய ராஜஸ்தான் அணி வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பஞ்சாப் அணியின் பந்துவீச்சைப் பறக்கவிட்டார் ஜோஸ் பட்லர். இந்நிலையில் ஜோஸ் பட்லர், அஸ்வினால் `மன்கட் அவுட் (ரன் அவுட்)' செய்யப்பட்ட விதம் ரசிகர்களிடையே பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இது பெரும் சர்ச்சையை கிளப்ப முன்னாள் வீரர்கள் பலரும் அஸ்வினை கடுமையாக விமர்சித்திருந்தனர். அஸ்வின் செயல் ஐபிஎல் விளையாட்டுக்கு நல்லதல்ல என எச்சரிக்கை விடுத்திருந்தனர். அதேநேரம் அவருக்கு ஆதரவு கிடைத்தது. தான் விதிப்படி தான் விளையாடியதாக ஐசிசி விதியை மேற்கோள்காட்டி அஸ்வின் பேசிவந்தார்.
தொடர்ந்து தான் விளையாடும் போட்டிகளில் மன்கட் எச்சரிக்கையை பேட்ஸ்மேன்களுக்கு கொடுத்து வருகிறார். அந்தவகையில் ஐதராபாத்துக்கு எதிராக நேற்றைய ஆட்டத்தில் அஸ்வின் மீண்டும் ‘மன்கட்’ முறையில் ரன் அவுட் செய்ய முயற்சித்தார் என ஒரு விவாதம் கிளம்பியுள்ளது. நேற்றைய ஆட்டத்தில் சஹாவும், வார்னரும் 5 ஓவர்களுக்கு மேலாக நிலைத்து நின்று ஆடினர். இதனால் அவர்களை பிரிக்க முடியாமல் தவித்தது பஞ்சாப் அணி. அப்போது 6வது ஓவரை வீச வந்த அஸ்வின் 2வது பந்தை வீச வந்தபோது ஸ்டெம்ப் அருகே வந்து நின்று கொண்டார். அவர் 2 முறை பந்தை வீச முயன்று வீசாமல் ஸ்டெம்ப் அருகே வந்து நின்று கொண்டார். இதனால் அவர் சஹாவை மன்கட் அவுட் செய்ய முயன்றார் என ரசிகர்கள் டுவிட்டரில் அவரை வறுத்தெடுத்து வருகின்றனர்.
அதேநேரம் அவரது பந்துவீச்சில் வார்னர் சிக்ஸர் விளாசியதால் அவரது ஆட்டத்தை தடுக்க தான் இப்படி செய்தார் ஒருபுறம் அவருக்கு ஆதரவு பெருகி வருகிறது. இதுகுறித்து ஒரு பெரும் விவாதமே டுவிட்டரில் போய் கொண்டிருக்கிறது.