சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதிய இரண்டாவது குவாலிஃபையர் மேட்சில் சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இந்த வெற்றிக்குப் பின் பேசிய சென்னை அணி கேப்டன் தோனி, ``இதுதான் வழக்கமான ரூட். 2018 மட்டும் இதில் விதிவிலக்கு. வீரர்கள் புத்திசாலித்தனமாக விளையாண்டனர். 140க்கு மேலான டார்கெட்டை துரத்திய நிலையில் எங்களது பேட்டிங் நன்றாக இருந்தது. ஆட்டம் 7.30 மணிக்கு எனும்போது இந்த பிட்ச் கொஞ்சம் ஈரப்பதத்துடன் இருக்கும். அப்படி இருந்தால் முதலில் அதிக ரன்களை அடிக்க முடியாது. அதனால் தான் பௌலிங்கை தேர்வு செய்தேன். அதேநேரம் பந்து நன்றாக திரும்பும் என்பதால் ஸ்பின்னர்களுக்கு இது ஏதுவாக இருக்கும். அதற்கேற்ப எங்களின் பௌலிங் யூனிட்டின் செயல்பாடு சிறப்பாக இருந்தது. பௌலர்கள் புத்திசாலிதமானாக பந்துவீசினார்கள்.
சரியான லெந்த்தில் பந்துவீசி டெல்லி அணியை பெரிய ஸ்கோர் எடுக்கவிடாமல் பார்த்துக்கொண்டனர். இதில் முக்கியம் எதிரணியின் ஒப்பனர்களை விரைவில் அவுட் ஆக்கியது தான். டெல்லி அணியின் பேட்டிங் லைன் அப் பலமாக இருந்தது. அதேபோல் அவர்களிடம் நிறைய இடக்கை ஆட்டக்காரர்களும் இருக்கிறார்கள். இவர்களை வெளியேற்றுவதற்காகவே இடது கை ஸ்பின்னர்களை வைத்திருக்கிறோம். ஒரு கேப்டனாக அணிக்கு என்ன தேவை என்பதை மட்டும் தான் கூற முடியும். அதன்படி, எப்படி பந்துவீசி பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்தலாம் என்பதை அவர்கள் தான் முடிவு எடுக்க வேண்டும். இதனை பௌலர்கள் நேற்று சிறப்பாக செய்து முடித்தார்கள். இந்த வெற்றிக்கு முழுகாரணமும் அவர்கள் தான். இந்த சீசனில் அவர்கள் அனைவரும் சிறப்பாக செயல்பட்டனர். பௌலர்களால் தான் நாங்கள் பைனலுக்கு சென்றுள்ளோம்" எனக் கூறினார்.
`ஒவ்வொரு ஐபிஎல்லும், ஒவ்வொரு மேட்சும், ஒவ்வொரு ஓவரும்' - பில்லா பாணியில் வெற்றியை கொண்டாடும் தாஹிர்