நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சென்னை அணி தோல்வியை தழுவியது கடும் விமர்சனத்தை சந்தித்து வருகிறது. குறிப்பாக கடைசி ஓவரை ஜடேஜாவுக்கு கொடுக்கப்பட்டது ஏன் என்பது குறித்த கேள்வி எழுந்த வண்ணம் இருக்கின்றன. விளையாடிய 9 போட்டிகளில் 6 தோல்வியை சந்தித்து இருப்பதால், சென்னை அணியின் கோப்பை கனவு மெதுவாக மங்கத் தொடங்கியுள்ளது. அணியின் தோல்விக்கு சில தவறான முடிவுகளே காரணம் எனக் கூறப்பட்டு வருகிறது. இதற்கிடையே, சென்னை அணியின் பயிற்சியாளர் பிளமிங் அணி தொடர்பாக பேட்டி கொடுத்துள்ளார். `` நேற்றைய போட்டியில் கடைசி ஓவரை பிராவோ வீசுவதாகதான் இருந்தது.
ஆனால் துரதிருஷ்டமாக பிராவோவுக்கு காயம் ஏற்பட்டது. அவரின் வலது தொடைப்பகுதியில் தசைப்பிடிப்பால் காயம் ஏற்படவே, பிராவோவால் கடைசி ஓவரில் பந்துவீசமுடியவில்லை. நிச்சயமாக பிராவோ டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் அனைவருக்கும் தெரியும். பல போட்டிகளில் கடைசி ஓவரில் பந்துவீசி சவால்களை வென்று எடுத்துள்ளார்.
பிராவோவுக்கு காயம் ஏற்பட்டதால் தான் வேறு வழி இல்லாமல் ஜடேஜாவுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. கடைசி ஓவரை வீசமுடியவில்லை என்று பிராவோ வருத்தப்பட்டார். அவருக்கு ஏற்பட்ட காயம் சரியாக 2 வாரங்கள் வரை ஆகலாம்." எனக் கூறியுள்ளார்.