முஷ்டாக் அலி டிராபி டி20 டெல்லியை தோற்கடித்த கேரளாவுக்கு ஹாட்ரிக் வெற்றி

by Nishanth, Jan 15, 2021, 19:57 PM IST

முஷ்டாக் அலி டிராபிக்கான டி 20 கிரிக்கெட் போட்டியில் கேரளா, டெல்லி அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இதன்மூலம் கேரளா தொடர்ந்து 3வது வெற்றியை பெற்றுள்ளது. முஷ்டாக் அலி டிராபிக்கான டி20 போட்டி மும்பையில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் கேரளா இன்று தொடர்ந்து 3-வது வெற்றியை பெற்றுள்ளது. கேரள அணி முதல் போட்டியில் புதுச்சேரியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும், 2வது போட்டியில் பலம் வாய்ந்த மும்பை அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும் தோற்கடித்தது. இந்தப் போட்டியில் கேரள வீரர் முகமது அசாருதீன் அபாரமாக ஆடி சதமடித்தார்.

இந்நிலையில் இன்று டெல்லி அணியுடன் கேரளா மோதியது. டாசில் வெற்றி பெற்ற கேரளா முதலில் பீல்டிங் செய்ய தீர்மானித்தது. இதையடுத்து பேட்டிங்கில் இறங்கிய டெல்லி, தொடக்கம் முதலே அதிரடியாக ஆடியது. டெல்லி கேப்டன் ஷிகர் தவான் 48 பந்துகளில் 77 ரன்கள் குவித்தார். இன்னொரு வீரர் லலித் யாதவ் 25 பந்துகளில் 52 ரன்கள் எடுத்தார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் டெல்லி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 213 ரன்கள் குவித்தது. கேரளா தரப்பில் முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் 46 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதன் பின்னர் 214 என்ற கடினமான வெற்றி இலக்குடன் களமிறங்கிய கேரளாவுக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. கடந்த போட்டியில் 137 ரன்கள் குவித்த முகமது அசாருதீன் இந்தப் போட்டியில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இஷாந்த் சர்மாவின் முதல் ஓவரில் இவர் அவுட் ஆனார். இதன் பின்னர் கேப்டன் சஞ்சு சாம்சன் 16 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் ராபின் உத்தப்பா மற்றும் விஷ்ணு வினோத் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் கேரளா எளிதில் வெற்றி இலக்கை அடைந்தது. உத்தப்பா 54 பந்துகளில் 91 ரன்கள் குவித்தார். விஷ்ணு வினோத் 38 பந்துகளில் 71 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில் கேரளா 19 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இதையடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணியை கேரளா தோற்கடித்தது. இது கேரளாவுக்கு தொடர்ச்சியான 3வது வெற்றியாகும்.

You'r reading முஷ்டாக் அலி டிராபி டி20 டெல்லியை தோற்கடித்த கேரளாவுக்கு ஹாட்ரிக் வெற்றி Originally posted on The Subeditor Tamil

More Sports News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை