சென்னை டெஸ்டில் இன்று 3ம் நாள் ஆட்டம் தொடங்கிய உடனேயே இந்தியா 3 விக்கெட்டுகளை இழந்தது. புஜாரா 7 ரன்களிலும், ரோகித் சர்மா 26 ரன்களிலும், பந்த் 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.சென்னை டெஸ்ட் போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 329 ரன்கள் எடுத்தது. இதன் பின்னர் ஆடிய இங்கிலாந்து, இந்திய பவுலர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 134 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் இந்தியா முதல் இன்னிங்சில் 195 ரன்கள் முன்னிலை பெற்றது. அதன் பிறகு இந்தியா நேற்று தங்களுடைய 2வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், சுப்மான் கில்லும் களமிறங்கினர்.
ஆனால் கில் 14 ரன்களில் ஜேக் லீச்சின் பந்தில் ஆட்டமிழந்தார். இதையடுத்து இந்தியா 42 ரன்களில் முதல் விக்கெட்டை இழந்தது. நேற்று ஆட்ட நேர முடிவில் இந்தியா ஒரு விக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் எடுத்திருந்தது. ரோகித் சர்மா 25 ரன்களுடனும், புஜாரா 7 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.இன்று ஆட்டம் தொடங்கிய உடன் காலையிலேயே இந்தியாவுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சிகள் காத்திருந்தன. புஜாரா அதே 7 ரன்களில் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். இதையடுத்து ரோகித் சர்மாவுடன் கேப்டன் விராட் கோஹ்லி இணைந்தார்.
ஆனால் அடுத்த சில நிமிடங்களிலேயே ரோகித் சர்மாவும் ஆட்டமிழந்தார். அவர் 26 ரன்கள் எடுத்த நிலையில் ஜேக் லீச்சின் பந்தில் அவுட் ஆனார். இதனால் இந்தியா 55 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்தது. இதன் பிறகு கோஹ்லியுடன் ரிஷப் பந்த் ஜோடி சேர்ந்தார். ஆனால் அவராலும் நீண்ட நேரம் நிலைத்து நிற்க முடியவில்லை. 8 ரன்கள் எடுத்த நிலையில் ஜேக் லீச்சின் பந்தில் ஆட்டமிழந்தார். இதையடுத்து கோஹ்லியுடன் துணை கேப்டன் ரகானே ஜோடி சேர்ந்துள்ளார். 65 ரன்களில் இந்தியா 4 விக்கெட்டுகளை இழந்து தவிக்கிறது.