சென்னை கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இன்று 4வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது. இங்கிலாந்துக்கு இன்னும் 429 ரன்கள் எடுக்க வேண்டும். கைவசம் 7 விக்கெட்டுகள் மட்டுமே உள்ளன. அஷ்வின் மற்றும் அக்சர் பட்டேலின் சுழலில் சிக்கி இங்கிலாந்து மீதமுள்ள 7 விக்கெட்டுகளையும் இன்றே இழக்கத் தான் அதிக வாய்ப்புகள் இருப்பதாக கருதப்படுகிறது.சென்னையில் நடைபெற்று வரும் 2வது டெஸ்ட் போட்டியில் டாசில் வெற்றி பெற்று பேட்டிங் செய்த இந்தியா, முதல் இன்னிங்சில் 329 ரன்கள் எடுத்தது. அஷ்வினின் சுழலில் சிக்கி இங்கிலாந்து வீரர்கள் தங்களது முதல் இன்னிங்சில் 134 ரன்களிலேயே பெவிலியன் திரும்பினர்.
இதனால் இந்தியா முதல் இன்னிங்சில் 195 ரன்கள் முன்னிலை பெற்றது. தொடர்ந்து 2வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா, அஷ்வினின் அபார சதம் மற்றும் கேப்டன் கோஹ்லியின் அரைசதத்தால் 286 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இங்கிலாந்துக்கு 482 ரன்கள் என்ற மிகக் கடினமான வெற்றி இலக்கை இந்தியா நிர்ணயித்தது. சுழற்பந்து வீச்சுக்கு பெருமளவு உதவி செய்யும் சேப்பாக்கம் மைதானத்தில் இந்த கடினமான வெற்றி இலக்கை இங்கிலாந்தால் எட்ட முடியாது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். அதன்படியே நேற்று இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கிய உடன் இங்கிலாந்து வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
அக்சரின் பந்தில் சிப்லி 3 ரன்களிலும், லீச் அதே அக்சரின் பந்தில் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். அக்சர் மற்றும் அஷ்வினின் சுழலை ஓரளவு தாக்குப் பிடித்து சிறப்பாக ஆடி வந்த பர்ன்ஸ், கடைசியில் அஷ்வினின் பந்தில் 25 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து 50 ரன்கள் எடுப்பதற்குள்ளேயே இங்கிலாந்து 3 விக்கெட்டுகளை இழந்தது. நேற்று ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 53 ரன்கள் எடுத்திருந்தது. லாரன்ஸ் 19 ரன்களுடனும் கேப்டன் ஜோ ரூட் 2 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இன்னும் 2 நாட்கள் ஆட்டம் மீதமுள்ள நிலையில் இங்கிலாந்துக்கு கைவசம் 7 விக்கெட்டுகள் மட்டுமே உள்ளன. வெற்றி பெற இன்னும் 429 ரன்கள் எடுக்க வேண்டும். முழுக்க முழுக்க சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக மாறி உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் இந்த கடினமான வெற்றி இலக்கை எட்ட இங்கிலாந்தால் நிச்சயம் முடியாது என்றே கருதப்படுகிறது. டிரா செய்யவும் அதிக வாய்ப்புகள் இல்லை. எனவே இன்றே இந்தியா வெற்றி பெறும் என்று ரசிகர்கள் கருதுகின்றனர்.
அஷ்வினின் சாதனை
நேற்றைய போட்டியில் அஷ்வினின் அபார பேட்டிங்கை பாராட்டாதவர்களே கிடையாது. அது மட்டுமில்லாமல் பவுலிங்கிலும் அவர் அசத்தினார். மேலும் ஒரே டெஸ்ட் போட்டியில் சதம் மற்றும் 5 விக்கெட்டுகளை எடுத்தவர்கள் பட்டியலில் அஷ்வின் 2வது இடத்தைப் பிடித்துள்ளார். இவர் இதுவரை 3 முறை இந்த சாதனையை படைத்துள்ளார். இவருக்கு முன் இங்கிலாந்தின் ஆல் ரவுண்டர் இயன் போத்தம் மட்டுமே உள்ளார். அவர் 5 முறை ஒரே டெஸ்ட் போட்டியில் சதமும், 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். அஷ்வின் இந்த டெஸ்ட் போட்டியில் இதுவரை 6 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.