இங்கிலாந்தில் பர்மிங்ஹாமில் நடந்து வரும் இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து அடித்துள்ளார் விராட் கோஹ்லி. டெஸ்ட் போட்டிகளில் இது அவரது 22வது சதமாகும். இங்கிலாந்து மண்ணில் முதன்முறையாக டெஸ்ட் போட்டிகளில் நூறு ரன்களை அடித்துள்ளார். .
இங்கிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் ஆயிரம் ரன்களை கடந்த இந்திய வீரர்கள் பட்டியலில் 13வது வீரராக இடம் பிடித்துள்ளார் விராட் கோஹ்லி. முதல் டெஸ்ட்டில் அவர் 23 ரன்களை எட்டியபோது இந்த சாதனையை நிகழ்த்தினார். அதன் மூலம் டெண்டுல்கர், கவாஸ்கர், டிராவிட், குண்டப்பா விஸ்வநாத், வெங்சர்க்கார், கபில்தேவ், அசாருதீன், மஞ்ச்ரேகர், தோனி, பாரூக் எஞ்ஜினியர், புஜாரா, ரவி சாஸ்திரி வரிசையில் கோஹ்லியும் இடம் பிடித்துள்ளார்.
சதத்தை எட்டுவதற்கு முன்பு 21 ரன்கள் எடுத்திருந்தபோது ஜேம்ஸ் ஆண்டசர்னின் பந்துவீச்சில் ஒரு முறையும், 52 ரன்கள் எடுத்திருந்தபோது பென் ஸ்டோக்ஸ் பந்து வீச்சில் ஒரு முறையும் ஸ்லிப்பில் கோஹ்லி கொடுத்த கேட்ச் வாய்ப்பை இங்கிலாந்தின் டாவிட் மலான் தவற விட்டார்.
172 பந்துகளில் 14 பவுண்டரிகளுடன் இங்கிலாந்து மண்ணில் தனது முதல் டெஸ்ட் சதத்தை ருசித்த கோஹ்லி, 225 பந்துகளில் 149 ரன்கள் எடுத்து அடில் ரஷத் பந்து வீச்சில் பிராட்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
வெகுவேகமாக இந்திய விக்கெட் வரிசை சரிந்து வந்த நிலையில் ஒற்றை மனிதனாக போராடி இந்தியா கௌரவமான ஸ்கோரை பெறுவதற்கு கோஹ்லி உதவினார். இந்தியா 274 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
முன்னதாக தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இங்கிலாந்து 287 ரன்கள் எடுத்திருந்தது. இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து ஒரு விக்கெட்டை இழந்து 9 ரன்கள் எடுத்திருந்த வேளையில் இரண்டாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.