சர்வதேச ஹாக்கி போட்டியில் இருந்து சர்தார் சிங் ஓய்வு

சர்வதேச ஹாக்கி போட்டியில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்து இருப்பதாக இந்திய ஹாக்கி அணி வீரரும் முன்னாளி கேப்டனுமான சர்தார் சிங் தெரிவித்துள்ளார்.

Sardar singh

இந்திய ஹாக்கி அணியின் முன்னணி நடுகள வீரரும், முன்னாள் கேப்டனுமான சர்தார் சிங் 2006-ம் ஆண்டில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான சர்வதேச போட்டியில் இந்திய அணியில் அறிமுக வீரராக இடம் பிடித்தார்.

அரியானாவை சேர்ந்த 32 வயதான சர்தார் சிங் இதுவரை 350 சர்வதேச போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடி இருக்கிறார். 2008-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை இந்திய அணியின் கேப்டனாகவும் இருந்தார்.

சமீபத்தில் இந்தோனேஷியாவில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய அணியில் இடம் பிடித்து இருந்தார். கடந்த முறை தங்கப்பதக்கம் வென்று இருந்த இந்திய அணி ஆசிய விளையாட்டு போட்டியில் இந்த முறை வெண்கலப்பதக்கம் தான் பெற்றது. சர்தார் சிங் ஆட்டம் எதிர்பார்த்தபடி அமையவில்லை.

இதன்காரணமாக, அடுத்த மாதம் (அக்டோபர்) 18-ந் தேதி ஓமனில் தொடங்கவுள்ள ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை தொடரில், சர்தார் சிங் பெயர் இடம் பெறவில்லை.

இந்த நிலையில் சர்தார் சிங் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சர்வதேச ஹாக்கி போட்டியில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன். எனது வாழ்க்கையில் போதுமான அளவுக்கு ஹாக்கி விளையாடி விட்டேன். 12 ஆண்டுகள் என்பது நீண்ட காலமாகும். வரும் தலைமுறையினருக்கு வழி விடுவதற்கு இதுவே சரியான தருணமாகும்.

எனது குடும்பத்தினர் மற்றும் ஹாக்கி இந்தியா நிர்வாகிகள், நண்பர்களுடன் கலந்து ஆலோசித்து இந்த ஓய்வு முடிவை எடுத்தேன். ஹாக்கியை தவிர்த்து எனது வாழ்க்கையை சிந்திக்க இது சரியான நேரமாக கருதுகிறேன்.

ஓய்வு முடிவு எடுக்க எனது உடல் தகுதி காரணம் இல்லை. இன்னும் சில ஆண்டுகள் தொடர்ந்து விளையாடக்கூடிய உடல் தகுதியுடன் தான் இருக்கிறேன். எல்லாவற்றுக்கும் ஒரு காலகட்டம் உண்டு.

வாழ்க்கையில் அடுத்த கட்டத்துக்கு நகர இதுதான் சரியான நேரம் என்று நினைக்கிறேன். எனது ஓய்வு முடிவை தலைமை பயிற்சியாளர் ஹரேந்திர சிங்குக்கு தெரிவித்து விட்டேன். உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன் என்றார்.

 

Get our website tamil news update in your mail inbox: Subscribe to The Subeditor - Tamil news website | RSS by Email

 

Recent Videos

Recent News

Most Read News

more headlines in our related posts

Related # news