ஆசிய கோப்பை: பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா !

by Mari S, Sep 20, 2018, 09:34 AM IST

ஆசிய கோப்பை தொடரில், பாகிஸ்தான் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது.

ஆசிய கோப்பையின் 5வது லீக் தொடர் நேற்று துபாயின் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. கிரிக்கெட்டில் பரம எதிரிகள் என ரசிகர்களால் கருதப்படும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின.

டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்கம் முதலே இந்திய பந்துவீச்சாளர்கள் பாகிஸ்தான் வீரர்களின் விக்கெட்டுகளை எடுத்து மிரட்டினர். இதனால், 43.1 ஓவர்களில், பாகிஸ்தான் அணி வெறும் 162 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்தியா வெற்றி பெற 163 ரன்களை இலக்காக பாகிஸ்தான் நிர்ணயித்தது.

அது அப்போ.. இது இப்போ..!

ஹாங்காங் அணியுடன் நடந்த போட்டியில், சொதப்பிய இந்திய வேகப்பந்து வீச்சாளரான புவனேஷ் குமார் பாகிஸ்தான் அணியுடனான போட்டியில் சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். நேற்றைய போட்டியில், அதிகமாக எக்ஸ்ட்ராக்கள் மற்றும் ரன்களை வாரி வழங்கிய ஷ்ரத்துல் தாக்கூருக்கு பதிலாக களமிறக்கப்பட்ட பும்ரா, 2 மெய்டன்கள் செய்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

கேதார் ஜாதவ் அசத்தல்:

முதல் போட்டியில், ஆடுவதற்கு தடுமாறிய ஆல்ரவுண்டர் கேதர் ஜாதவ், நேற்றைய போட்டியில், 9 ஓவர்கள் வீசி வெறும் 23 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி பாகிஸ்தான் அணியின் வெற்றி கனவை தகர்த்துள்ளார்.

பாண்ட்யா காயம்:

இந்திய அணியின் ஹர்திக் பாண்ட்யா 4.5 ஓவர்கள் வீசும் போது நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடைந்தார். இதனையடுத்து பாண்ட்யாவை ஸ்ட்ரெச்சரில் வைத்து மருத்துவர்கள் சிகிச்சைக்கு தூக்கி சென்றனர்.

நிதானமாக ஆடிய பாபர் - மாலிக் ஜோடி

பாகிஸ்தான் அணியில், பாபர் அஸாம் மற்றும் சோயப் மாலிக் பொறுப்புடன் ஆடினர். ஆனால், பாபர் 47 ரன்களுக்கும் சோயப் மாலிக் 43 ரன்களுக்கும் விக்கெட்டுகளை பறிகொடுத்ததால், பாகிஸ்தான் அணி பெரிய ஸ்கோரை இந்தியாவுக்கு எதிராக நிர்ணயம் செய்ய தவறியது.

பம்மிய பாகிஸ்தான் பவுலர்கள்:

ஹாங்காங் அணியுடனான முதல் போட்டியில், 116 ரன்களுக்கு அந்த அணியை சுருட்டிய திறமை வாய்ந்த பாகிஸ்தான் பவுலர்கள், இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களான கேப்டன் ரோகித் சர்மா மற்றும் தவானின் அதிரடியால் சரணடைந்தனர்.

ரோகித் - தவான் பாய்ச்சல்:

ஹாங்காங் அணியுடனான போட்டியில் சோபிக்காத கேப்டன் ரோகித் சர்மா மீது சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்கள் கிளம்பின. ஆனால், நேற்றைய பாகிஸ்தான் அணியுடனான போட்டியில் 39 பந்துகளில் 3 சிக்ஸர்கள் 6 பவுண்டரிகள் என 52 ரன்கள் குவித்து, விமர்சனங்களை பாராட்டுக்களாக மாற்றினார்.

மற்றொரு முனையில், ஆடிய தவான், தனது பொறுப்பான ஆட்டத்தை மீண்டும் வெளிப்படுத்தி, 54 பந்துகளில் 1 சிக்ஸர் 6 பவுண்டரிகள் விளாசி 46 ரன்கள் எடுத்த நிலையில், பாபர் அசாமிடம் கேட்ச் கொடுத்து, அரை சதத்தை இழந்தார்.

பின்னர் களமிறங்கிய அம்பத்தி ராயுடு மற்றும் தினேஷ் கார்த்திக் ஜோடி, தலா 31 ரன்கள் எடுத்து இந்திய அணியை வெற்றியடைய செய்தனர்.

இதனால், 29 ஓவர்களில் 2 விக்கெட்கள் மட்டுமே இழந்து இந்திய அணி 164 ரன்கள் எடுத்து அபார வெற்றியை இந்திய ரசிகர்களுக்கு பரிசளித்தது.

You'r reading ஆசிய கோப்பை: பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா ! Originally posted on The Subeditor Tamil

More Sports News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை