பொள்ளாச்சி சம்பவம் வீதிக்கு வந்துவிட்டதால் அதிமுகவை விடவும் பாஜக கூடாரத்தில்தான் பதற்றம் தென்படுகிறது. தேர்தல் நாளில் இந்த விவகாரத்தால் கோவை தொகுதியின் வெற்றி பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்ற பதற்றம் அவர்களை ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறது.
நாடாளுமன்றத் தேர்தலில் கொங்கு மண்டலத்தில் கோவை, திருப்பூர் ஆகிய தொகுதிகளை குறிவைத்துத் தேர்தல் வேலை பார்த்துக் கொண்டிருக்கின்றனர் சி.பி.ராதாகிருஷ்ணனும், வானதி சீனிவாசனும்.
கோவை தொகுதி பாஜகவுக்கு உறுதியாகிவிட்டதால், அடிமட்டத் தொண்டர்களிடம் தேர்தல் வேலை வாங்கிக் கொண்டிருக்கிறார் சிபிஆர். கொங்கு அமைச்சர்களின் ஆதரவு இருப்பதால் திருப்பூர் தொகுதி வாங்கிவிட வேண்டும் என டெல்லிக்கு நடையாய் நடந்து கொண்டிருக்கிறார் வானதி.
இந்தநேரத்தில், அம்புகள் மட்டுமே சிக்கியிருக்கின்றன எனக் கூறி சிக்சர் அடித்துவிட்டார் கொங்கு ஈ.ஆர்.ஈஸ்வரன். அவருடைய வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சாதி சங்கங்களையும் களத்தில் இறக்கிவிட்டிருக்கிறார்.
எடப்பாடி அண்ட் கோவின் கொங்கு வியூகத்தை உடைக்க நினைத்த ஸ்டாலினுக்கு இந்த சம்பவம் வரப்பிரசாதமாக வாய்த்துவிட்டது. தொடக்கத்தில் இந்த விவகாரத்தில் எதையும் சொல்லாமல் மௌனம் காத்தார் ஸ்டாலின்.
தன்னுடைய டீம் மூலமாக, திமுக நிர்வாகிகள் யாராவது இதில் சம்பந்தப்பட்டுள்ளார்களா என ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் முடிவில், 7 ஆண்டுகளாக அதிமுக புள்ளிகள் தான் ஆட்டம் போட்டு வந்தனர் என்ற தகவல் கிடைக்கவே, அறிக்கை மூலமாக ஆடித் தீர்த்துவிட்டார்.
தொடக்கத்தில் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்ட எடப்பாடி பழனிசாமி, பின்னர் சிபிஐக்குப் பரிந்துரை செய்யப்படுவதாக கூறியிருக்கிறார். இதைப் பற்றிப் பேசும் பாஜக பிரமுகர்கள், மாநில அரசின் சிபிசிஐடி விசாரணையை பொதுமக்கள் நம்ப மாட்டார்கள் என பாஜக தரப்பில் இருந்து தமிழக அரசுக்கு சொல்லப்பட்டது.
அவர்களின் ஆலோசனையின்படியே, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுவதாக அரசு அறிவித்துள்ளது. இதன் காரணமாக, பொதுமக்கள் மத்தியிலும் அரசின் மீது நம்பகத்தன்மை வரும். பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் இருந்தும், அமைச்சர்களுக்குத் தொடர்பில்லை, துணை சபா பொள்ளாச்சியாருக்கு சம்பந்தமில்லை எனப் பேசும் ஆடியோக்களைப் பரப்பினால், ஓரளவு கோபம் தணியும் எனக் கூறியுள்ளனர்.
அதன்படியே அரசும் மாவட்ட நிர்வாகமும் செயல்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் இந்தத் திடீர் தலைவலியை எப்படி மறக்கடிப்பது என்ற ஆலோசனையும் அதிமுக வட்டாரத்தில் நடந்து வருகிறது' என்கின்றன
-அருள் திலீபன்