அசுரன் திரைப்படம் பார்த்த மு.க.ஸ்டாலின், அசுரன் படம் அல்ல, பாடம் என்று ட்விட்டரில் பாராட்டு தெரிவித்தார். தொடர்ந்து, வெற்றிமாறன் மற்றும் தனுஷை தொடர்பு கொண்டு அவர் பாராட்டினார்.
எழுத்தாளர் பூமணி எழுதிய வெக்கை என்ற நாவலின் கதையை மையமாக வைத்து அசுரன் என்ற படத்தை வெற்றிமாறன்-தனுஷ் உருவாக்கியிருக்கிறார்கள். நடிகை மஞ்சு வாரியர், பசுபதி, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில், நாங்குனேரி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தூத்துக்குடியில் உள்ள தியேட்டரில் இந்த திரைப்படத்தை நேற்று(அக்.16) பார்த்தார். இதன்பின், மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு போட்டார். அதில், அசுரன் படம் மட்டுமல்ல பாடம்! பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து சாதிய சமூகத்தைச் சாடும்-சாதி வன்மத்தை கேள்வி கேட்கும் துணிச்சல்காரன்!
கதை-களம்-வசனம் என வென்று காட்டியிருக்கும் வெற்றி மாறனுக்கும், வாழ்ந்து காட்டியிருக்கும் தனுஷுக்கும் பாராட்டுகள் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வெற்றிமாறன், தனுஷ் ஆகியோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார்.