இடைத்தேர்தல் நடைபெற்ற விக்கிரவாண்டி தொகுதியில் 84.36 சதவீத வாக்குகளும், நாங்குநேரியில் 66.10 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது.
கடந்த ஜூனில் விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் ராதாமணி திடீர் மரணம் அடைந்தார். கடந்த மே மாதம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ஹெச்.வசந்தகுமார் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் ஏற்கனவே நெல்லை மாவட்டம் நாங்குனேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். எனவே, எம்.பி.யானதும் தனது எம்.எல்.ஏ. பதவியை அவர் ராஜினாமா செய்தார். இதனால், நாங்குனேரி, விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகளும் காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்த 2 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் காலியாக இருந்த காமராஜ்நகர் சட்டசபை தொகுதிக்கும் நேற்று(அக்.21) இடைத்தேர்தல் நடைபெற்றது.
விக்கிரவாண்டி தொகுதியில் முத்தமிழ்செல்வன் (அ.தி.மு.க.), புகழேந்தி (தி.மு.க.), கந்தசாமி (நாம் தமிழர்) உள்பட 12 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். நாங்குநேரி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் ரெட்டியார்பட்டி நாராயணன், தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ரூபி மனோகரன், நாம் தமிழர் கட்சி சார்பில் ராஜ்நாராயணன் உள்பட 23 பேர் போட்டியிட்டனர். புதுச்சேரி காமராஜ் நகரில் காங்கிரஸ் சார்பில் ஜான்குமார், என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் புவனேஸ்வரன் உள்பட 9 பேர் போட்டியிட்டனர்.
மூன்று சட்டசபைத் தொகுதிகளிலும் நேற்று(அக்.21) காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாஹு கூறுகையில், விக்கிரவாண்டி தொகுதியில் 84.36 சதவீத வாக்குகளும், நாங்குநேரியில் 66.10 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் 81.71 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. ஆனால் இந்த இடைத்தேர்தலில் அதை விட அதிகமாக 84.36 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. இதேபோல் கடந்த சட்டசபை தேர்தலில் நாங்குநேரி தொகுதியில் 71.90 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. இந்த இடைத்தேர்தலில் 66.35 சதவீத வாக்குகளே பதிவாகியுள்ளது. இங்கு வாக்குப்பதிவு சதவீதம் குறைந்துள்ளது என்றார்.
இந்நிலையில், புதுச்சேரி காமராஜ் நகர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் 69.44 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த 3 தொகுதிகளில் பதிவான வாக்குகள் வரும் 24ம் தேதி எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும்.