மத்திய அரசு இ-பாஸ் விவகாரத்தில் தளர்வு செய்ய வேண்டும் என மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது. மேலும் ``மாநிலங்களுக்கு இடையேயும் மாநிலத்துக்கு உள்ளேயும் பொதுமக்கள் பயணம் செய்யவும், பொருட்களைக் கொண்டுசெல்லக் கட்டுப்பாடுகளை விதிக்கக் கூடாது" என்று அறிவித்தது. இதனையடுத்து மாநில அரசுகள் தளர்வுகள் குறித்து ஆலோசனை செய்து வருகிறது. அண்டை மாநிலமான கர்நாடக அரசோ, `` மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் நீக்கப்படுகின்றன.
மேலும், வெளி மாநிலங்களிலிருந்து கர்நாடகம் வரும் கொரோனா அறிகுறிகள் இல்லாத பயணிகள், எப்போதும் போல வேலையில் சேர்ந்து பணிபுரியலாம். அவர்களுக்கு 14 நாள்கள் கட்டாயத் தனிமைப்படுத்துதல் தேவையில்லை" என்று அறிவித்தது. கர்நாடகாவைப் போல் தமிழக அரசும் தளர்வுகள் குறித்து ஆலோசனை செய்து வருகிறது. விரைவில் அது குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, வெளிமாநில பயணிகளுக்கு கட்டுப்பாட்டுடன் கூடிய தளர்வுகளை அறிவித்துள்ளது தமிழக அரசு. தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா தளர்வுகளை அறிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ``வெளி மாநிலங்களில் இருந்து வணிக நோக்கில் வருபவர்கள் 72 மணி நேரம் மட்டும் தங்குவதாக இருந்தால் இ பாஸ் வழங்கப்படும். அப்படி 72 மணிநேரம் தங்க வரும் அவர்களுக்குத் தனிமைப்படுத்தலிலிருந்து விலக்கு அளிக்கப்படும். மேலும் தொழில்துறையின் தவிர விருந்தோம்பல், தகவல் தொழில் நுட்பம், பொழுதுபோக்கு, சட்டம் சார்ந்த துறையினருக்கும் இச்சலுகை வழங்கப்படும். தொழிற் துறை வளர்ச்சியைக் கருதி இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது" என்று தெரிவித்துள்ளார்.