சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்திற்காக மரம் வெட்டியவர்களை கைது செய்யாவிட்டால், கடும் உத்தரவு பிறப்பிக்க நேரிடும் என சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
சென்னை - சேலம் இடையேயான பசுமை வழிச்சாலை திட்டத்திற்கு தடை விதிக்க கோரி பாமக எம்பி அன்புமணி ராமதாஸ், விவசாயிகள், நில உரிமையாளர்கள் என பலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் தொடர்ந்துள்ளனர்.
இந்த வழக்குகள் நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.அப்போது, இத்திட்டத்திற்காக தர்மபுரியில் சட்டவிரோதமாக மரங்கள் வெட்டப்பட்டது குறித்தும், பதிலுக்கு மரம் நடப்பட்டது குறித்தும் அரசு தரப்பு வழக்கறிஞரிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
ஆனால், அதுகுறித்து எந்த தகவலும் இல்லை என்றும் பதிலளிக்க கால அவகாசம் அளிக்க கோரி அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், வழக்கு குறித்த தகவல் இல்லை என்றால் நீதிமன்ற அறைக்கு வரவேண்டாம் என காட்டமாக தெரிவித்தனர்.
மேலும், 8 வழிச்சாலை வழக்கு விசாரணைக்காக அரசு வழக்கறிஞர்களை பத்திரிகை வைத்து அழைக்க வேண்டுமா என சாடிய நீதிபதிகள், இந்த வழக்கில் ஆரம்பத்திலிருந்தே அரசு வழக்கறிஞர்கள் அலட்சியமாக செயல்படுவதாக குற்றம் சாட்டினார்.
சமீபத்தில் (எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவிற்கு) சென்னை முழுவதும் வைக்கப்பட்ட பேனரில் அரசு வழக்கறிஞர் ஒருவரின் புகைப்படமும் வைக்கப்பட்டிருந்ததாகவும், நீதிமன்ற உத்தரவை அரசு வழக்கறிஞரே மீறுவதை ஏற்க முடியாது எனத் தெரிவித்த நீதிபதிகள், பேனரில் புகைப்படம் வைக்க வேண்டு மென்றால் நீதிமன்றத்திற்கு வர வேண்டாம் என தெரிவித்தனர்.
அரசு வழக்கறிஞர் பதவிக்கு ஒரு மரியாதை உள்ளது. அதை கெடுக்கும் விதத்தில் செயல்பட வேண்டாம் என அறிவுறுத்திய நீதிபதிகள், மரம் வெட்டியவர்களை கைது செய்யாவிட்டால் கடுமையான உத்தரவு பிறப்பிக்க நேரிடுமெனக் கூறி, விசாரணையை நாளைக்கு தள்ளிவைத்தனர்.