ஆம்பூர் அருகே மயானத்திற்கு செல்லும் வழி அடைக்கப்பட்டதால், இறந்தவரின் சடலத்தை வைத்து உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த ராஜபாளையம் அருந்ததியர் காலணி சேர்ந்த சரோஜா என்பவர் உடல்நிலை சரியில்லாமல் இறந்தார். இறந்தவர்களின் உடலை காலகாலமாக எடுத்து செல்லும் வழியை நிலத்தின் உரிமையாளர் வெங்கடேசன் என்பவர் முள் வேலி போட்டு அடைத்துள்ளார்.
இதனால் மயானத்திற்கு உடலை எடுத்து செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. இறந்த சரோஜா வீட்டின் முன்பு கிராம மக்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர் .பின்னர் அதிகாரிகள் யாரும் வராததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆம்பூர் டி .எஸ் .பி சச்சிதானந்தம் தலைமையிலான போலீசார் மற்றும் வட்டாட்சியர் சுஜாதா உள்ளிட்டோர் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் .அப்போது பல ஆண்டுகளாக நீடிக்கும் இந்த பிரச்சினை குறித்து, துணை ஆட்சியர் உள்ளிட்ட பல அரசு அதிகாரிகளிடம் புகார் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என வும் ,நிரந்தர தீர்வு காணும் வரை சாலைமறியலை கைவிடமாட்டோம் என வாக்குவாதம் செய்தனர்.
மயானத்திற்கு நிரந்தர வழி அமைத்து தர நடவடிக்கை எடுப்பதாக வட்டாட்சியர் உறுதி அளித்த பிறகு, உடனடியாக மறியல் கைவிடப்பட்டது. அதனைதொடர்ந்து, முள்வேலி போட்டு மூடப்பட்ட பாதை திறக்கப்பட்டது.