கூகுள் நிறுவனத்தின் கூகுள் மீட் காணொளி செயலி, கல்வி மற்றும் வணிக செயல்பாடுகளுக்கு அதிக உதவியாக இருந்து வருகிறது. கட்டணமில்லாமல் இதனைப் பயன்படுத்துவோருக்குச் சில கட்டுப்பாடுகளை விதிக்க இருப்பதாகக் கூகுள் நிறுவனம் கூறினாலும் தற்போதைய கொரோனா சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு அவற்றை நடைமுறைப்படுத்தாமல் இருந்து வந்தது.இம்மாதம் ஒரே சமயத்தில் 49 பயனர்களைக் காணக்கூடிய வசதியும் கூகுள் மீட்டில் அறிமுகம் செய்யப்பட்டது. சந்திப்பை நடத்துபவரைக் காணும் வசதியும் கொடுக்கப்பட்டது.
கூகுள் மீட் செயலியின் அட்வான்ஸ்ட் எனப்படும் சிறப்பம்சங்களை 'எண்டர்பிரைஸ்' என்ற வகையில் உள்ள பயனர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். அவ்வகையினர் மாதத்திற்கு 25 டாலர் கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால், இந்த சிறப்பம்சங்களை அனைத்து ஜி சூட் மற்றும் ஜி சூட் ஃபார் எஜுகேஷன் பயனர்களும் பயன்படுத்தக் கூகுள் நிறுவனம் அனுமதித்திருந்தது. இந்த கட்டணமில்லா சலுகையின் காரணமாகத் தினமும் 3 பில்லியன் நிமிடங்கள் (5 கோடி மணி) அளவுக்கு அதாவது 30 மடங்கு அதிகமாகப் பயன்பாடு அதிகரிப்பதிருப்பது தெரிய வந்தது.
எந்த பயனரும் 100 பங்கேற்பாளர்களுடன் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் சந்திப்பை நடத்தலாம் என்றிருந்த நிலைமாறி, அனைத்து கூகுள் சூட் மற்றும் கூகுள் சூட் ஃபார் எஜுகேஷன் பயனர்களும் 250 பங்கேற்பாளர்களுடன் நேர கணக்கின்றி சந்திப்பை நடத்த முடியும் என்ற சலுகை இருந்து வந்தது. ஒரே தளத்தில் 1 லட்சம் பேரை நேரலையில் இணைக்க முடியும்.
செப்டம்பர் 30ம் தேதியுடன் கூகுள் மீட் இந்த சிறப்பம்சங்களைக் கட்டணமில்லா பயனர்களுக்கு நிறுத்த இருக்கிறது. அதன்பிறகு கட்டணமில்லா சேவையில் அதிகபட்சமாக 60 நிமிடங்கள் (1 மணி நேரம்) கொண்ட சந்திப்புகளையே நடத்த முடியும்.