களியக்காவிளை செக்போஸ்டில் துப்பாக்கியால் சுட்டு எஸ்.ஐ. கொலை.. நள்ளிரவில் பயங்கரம்

by எஸ். எம். கணபதி, Jan 9, 2020, 11:44 AM IST

களியக்காவிளை சோதனைச் சாவடியில் சிறப்பு எஸ்.ஐ. ஒருவரை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு விட்டு 2 மர்ம நபர்கள் தப்பியோடியுள்ளனர். அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கேரள எல்லையில் உள்ள களியக்காவிளையில் ஒரு சோதனைச் சாவடி உள்ளது. இங்கு நேற்்று(ஜன.8) இரவு பணியில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் வில்சன் இருந்தாா். இரவு 9 மணியளவில் ஒரு ஸ்கார்பியோ காரில் வந்த 2 இளைஞர்கள் கைத்துப்பாக்கியால் வில்சனை 3 முறை சுட்டனர். சத்தம் கேட்டு மற்ற காவலர்கள் வருவதற்குள் அந்த இளைஞர்கள் வேகமாக ஓடிச் சென்று காரில் ஏறி தப்பி விட்டார்கள்.


தலை, மார்பு, கால் பகுதியில் குண்டுகள் பாய்ந்த நிலையில் வில்சன் கீழே விழுந்தார். பலத்த காயங்களுடன் மயங்கிய வில்சனை குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு போய் சேர்த்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். தமிழகம் மற்றும் கேரளா எல்லையில் நடந்த இந்த சம்பவத்தால் இரவு முழுவதும் பெரும் பரபரப்பு காணப்பட்டது. தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு மணல் கடத்தல் நடைபெறுவதாகவும், அந்த கடத்தல்காரர்கள்தான் வில்சனை கொன்றிருக்கலாம் என்றும் பேசப்பட்டது.


இதையடுத்து, கன்னியாகுமரி முழுவதும் வாகனச் சோதனையில் போலீசார் ஈடுப்பட்டு வருகிறார்கள். மாவட்ட எஸ்.பி. ஸ்ரீநாத், தக்கலை டி.எஸ்.பி. ராமச்சந்திரன் ஆகியோா் சோதனைச் சாவடிக்கு வந்து பார்வையிட்டனர். துப்பாக்கிச் சூட்டில் பலியான வில்சன் உடல் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது அங்கு ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.


காரில் வந்த நபர்கள் தமிழகத்திற்குள் புகுந்துள்ளதால், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி கன்னியாகுமரி மாவட்டங்களில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும், சோதனைச் சாவடியில் இருந்த சிசிடிவி கேமராக்களில், கொலையாளிகள் 2 பேர் தப்பிச் செல்லும் காட்சிகள் உள்ளன. இதைக் கொண்டு கொலையாளிகளை அடையாளம் கண்டுள்ள போலீசார் அவர்களை வலைவீசி தேடிவருகின்றனர். இதற்கிடையே, வழுக்கம்பாறை அருகே சொகுசு காரை சோதனை செய்த போலீசார் சோதனையிட்டதில் ஒரு பொம்மை துப்பாக்கியை பறிமுதல் செய்துள்ளனர். இதற்கும் சம்பவத்திற்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்று விசாரித்து வருகின்றனர்.Leave a reply