300 எக்ஸ்ரேவுக்கு சமம் புற்றுநோய் அபாயம் – சிடி ஸ்கேன் வேண்டாமே!

by Madhavan, May 4, 2021, 10:30 AM IST

நாட்டில் கொரோனா நோய்த்தொற்று வேகமாக பரவி வருகிறது. அந்த நோயின் லேசான அறிகுறி தென்பட்டாலும்கூட உடனே சி.டி. ஸ்கேன் எடுக்கும் பழக்கம் பரவலாக இருப்பதாக தெரியவந்துள்ளது.

லேசான அறிகுறிகளுக்கு சி.டி. ஸ்கேன் எடுப்பது ஆபத்தானது என்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், சிடி-ஸ்கேன் மற்றும் உயிரி குறியீடு நடைமுறைகள் தவறாக பயன்படுத்தப்படுகின்றன. இது கடும் பாதிப்புகளை ஏற்படுத்தும். லேசான கொரோனா பாதிப்பு உடையவா்களுக்கு சிடி-ஸ்கேன் எடுப்பது தேவையில்லை.

ஒரு முறை சிடி-ஸ்கேன் எடுப்பது, 300 முதல் 400 முறை இதய எக்ஸ்-ரே எடுத்ததற்கு சமமாகும். இளைய வயதினருக்கு அடிக்கடி சிடி-ஸ்கேன் எடுப்பது, பின்னாளில் அவா்களுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. கதிா்வீச்சுக்கு உங்களை நீங்களே ஆட்படுத்திக் கொள்வது, கடுமையான பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.

கொரோனா நோய்த்தொற்றின் லேசான அறிகுறிகளுக்காக சி.டி. ஸ்கேன் தவறாக பயன்படுத்தப்படுகிறது. சி.டி. ஸ்கேன் அதிகமாக பயன்படுத்துவதால் கதிர்வீச்சின் வெளிப்பாடு அதிகரிக்கிறது. இதனால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது.

லேசான தொற்று பாதிப்புக்காக ஸ்கேன் செய்வதில் எந்த பலனும் இல்லை. நிறைய பேர் சி.டி. செய்வதே முக்கியம் என்று கருதுகிறார்கள். லேசான தொற்று இருப்பது தெரிய வரும்போது வீட்டு தனிமையில் இருப்பதே நல்லது. ஒரு சி.டி. ஸ்கேன் 300 மார்பு எக்ஸ்ரேக்களுக்கு சமம். எனவே தேவையின்றி அடிக்கடி சி.டி. ஸ்கேன் எடுக்க வேண்டாம்.” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

You'r reading 300 எக்ஸ்ரேவுக்கு சமம் புற்றுநோய் அபாயம் – சிடி ஸ்கேன் வேண்டாமே! Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை