தேர்தல் என்ற பெயருல விஷால் டீம் ஒரு டிராமா பண்றாங்க. அதனால நானும் அல்வா என்ற பெயருல டிராமா பண்ணுறேன் என்று எஸ்.வி.சேகர் கிண்டலாகக் கூறியுள்ளார்.
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் எம்ஜிஆர்-ஜானகி கல்லூரியில் வரும் 23ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த கல்லூரியில் தேர்தல் நடத்த உயர்நீதிமன்றம் தடை விதித்திருக்கிறது. இப்போதைய சூழலில், தேர்தலே நடக்காது என்பது நன்றாக தெரிகிறது.
இதற்கிடையே, நடிகர் விஷால் அணியை எதிர்த்து முன்பு வழக்கு போட்ட நகைச்சுவை நடிகர் எஸ்.வி.சேகர், தந்தி தொலைக்காட்சி விவாதத்தில் கலந்து கொண்டு கூறியதாவது:
நான் எம்.ஜி.ஆர்-ஜானகி கல்லூரியில் 25 வருஷமா நாடகம் போட்டிருக்கிறேன். இந்த தடவ ‘அல்வா’ நாடகத்தை வரும் 23ம் தேதி போடுவதற்காக அந்த கல்லூரி அரங்கிற்கு கடந்த 14ம் தேதி பணம் கட்டியுள்ளேன். நடிகர் சங்கத் தேர்தலை நடத்த விடாமல், வேண்டுமென்றே நாடகம் போட அரங்கிற்கு பணம் கட்டியிருக்கிறேன் என்று சொல்லுகிறார்கள்.
ஆமாம். அப்படித்தான் கட்டியிருக்கிறேன். அவங்க(விஷால் அணி), தேர்தல் என்ற பெயருல ஒரு டிராமா பண்றாங்க. அதனால நானும் அல்வா என்ற பெயருல டிராமா பண்ணுறேன். அவங்களாவே சில பேரை சங்கத்துல இருந்து நீக்கியிருக்காங்க. சில பேரை சேர்த்துருக்காங்க. அவங்களுக்கு வேண்டிய ஓய்வு பெற்ற நீதிபதியை தேர்தல் அதிகாரியா போட்டு, அவங்க விருப்பப்படி தேர்தலை நடத்தி, தானா வெற்றி பெற்றதாக காட்டப் பாக்கிறார்கள்.
விஷால் அணியில் இருப்பவர்களுக்கு 9 மாதம் முன்பே பதவிக்காலம் முடிந்து போய் விட்டது. அவர்கள் எப்படி நடிகர் சங்கக் கூட்டம் போட்டு தீர்மானம் செய்யலாம்? மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு பதவிக்காலம் முடிந்து ரொம்ப நாளாயிருச்சு. இப்ப போய் பழைய கவுன்சிலர்கள் கூட்டம் போட்டு தீர்மானம் நிறைவேற்ற முடியுமா?
விஷால் அணி ஏகப்பட்ட ஊழல் செய்திருக்கிறது. அதனால், நடிகர் சங்கத்துக்கு ஒரு தனி அதிகாரி போட்டு அதை எல்லாம் விசாரிக்க வேண்டும். நீக்கிய உறுப்பினர்ளுக்கு வாய்ப்பு கொடுத்து, மூன்று அல்லது ஆறு மாதம் கழித்து தேர்தலை நடத்த வேண்டும். 16 செயற்குழு கூட்டத்துக்கு விஷால் வரவே இல்லை. அவர் தேர்தலில் போட்டியிடவே தகுதி கிடையாது.
இவ்வாறு எஸ்.வி. சேகர் கூறியுள்ளார்.