சர்கார் திரைப்படத்தில் அரசின் இலவச பொருட்களை எரித்ததற்காக மன்னிப்பு கேட்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் தரப்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்ச்சைக்குரிய சர்கார் திரைப்படத்தில் தமிழக அரசின் இலவச பொருட்களை எரித்ததால் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து அந்த காட்சிகள் படத்தில் இருந்து நீக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து போலீசார் தம்மை கைது செய்யக் கூடும் என்பதால் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முருகதாஸ் மனுத்தாக்கல் செய்திருந்தார். இம்மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், முருகதாஸை கைது செய்ய இடைக்கால தடை விதித்தது.
இம்மனு மீதான விசாரணையின் போது தமிழக அரசு தரப்பில், முருகதாஸ் மன்னிப்பு கேட்க வேண்டும்; அரசை விமர்சிக்கும் காட்சிகளை இனி வரும் படங்களில் வைக்கமாட்டேன் என உறுதி அளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இந்நிலையில் இன்று இவ்வழக்கின் விசாரணை மீண்டும் நடைபெற்றது. இன்றைய விசாரணையில் சர்கார் திரைப்படத்தில் தமிழக அரசின் இலவச பொருட்களை எரித்ததால் மன்னிப்பு கேட்க முடியாது என முருகதாஸ் தரப்பில் திட்டவட்டமக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து முருகதாஸ் மீதான புகார் குறித்து காவல்துறை விசாரணையை தொடங்கலாம் என்றும் முருகதாஸை கைது செய்ய 2 வாரங்களுக்கு தடையை நீட்டிப்பதாகவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.