திமுக மகளிரணிச் செயலாளரும், மாநிலங்களவைக் குழுத் தலைவருமான கனிமொழி எம்பி. கடந்த ஜனவரி மாதம் தூத்துக்குடி மாவட்டத்தில் திமுக தலைமை அறிவித்த ஊராட்சி சபைக் கூட்டங்களில் பங்கேற்றார். அந்த வகையில் ஜனவரி 27ஆம் தேதி தூத்துக்குடி ஒன்றியத்துக்கு உட்பட்ட மாப்பிள்ளையூரணி கிராமத்தில் ஊராட்சி சபையில் கலந்துகொண்டார் கனிமொழி. அப்போது அவரிடம் பேசிய பெண்கள் பலர், சுகாதார வசதி சரியில்லை என்று குறைகளைப் பட்டியலிட்டனர்.
அப்போது மக்களிடம் பேசிய கனிமொழி, வெகு விரைவில் மருத்துவ முகாமை இந்த பகுதியில் நடத்த ஏற்பாடு செய்து தருவதாக வாக்களித்தார். அதன்படியே நேற்று(பிப்ரவரி 17) மாப்பிள்ளையூரணி கிராமத்தில் மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. அப்பல்லோ, அரவிந்த கண் மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகளைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்களும், செவியர்களும் மாப்பிள்ளையூரணி மருத்துவ முகாமில் கலந்துகொண்டனர்.
காது, மூக்குத் தொண்டை, பொது மருத்துவத்தில் தொடங்கி வயிற்றுப் பிரச்சினை, இருதய நோய், நுரையீரல் கோளாறுகள், குழந்தைகள் மருத்துவம், பெண்களுக்கான பிரத்யேக பிரச்னைகள், மகப்பேறு மருத்துவம், கண் மருத்துவம், சர்க்கரை நோய்க்கான சிகிச்சை என அனைத்து வகை பிரச்னைகளுக்கும் மாப்பிள்ளையூரணி மருத்துவ முகாமில் உரிய மருத்துவர்களைக் கொண்டு ஆலோசனைகளும் சிகிச்சைகளும் அளிக்கப்பட்டன. இதுமட்டுமல்லாமல் கண் புரை போன்ற பிரச்சினைகளைக் கண்டறிந்து உரிய மூக்கு கண்ணாடிகளும் இலவசமாக வழங்கப்பட உள்ளது.
387 பேரைப் பரிசோதித்ததில் 135 பேருக்கு மூக்கு கண்ணாடி தேவைப்படுகிறது. அவர்களுக்கு ஒரு வாரத்தில் கண்ணாடி வழங்கப்படும் என மருத்துவர்கள் உறுதியளித்தனர். 16 பேருக்கு நாளை அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. சாதாரண சோதனை முதல் ஈசிஜி, ஸ்கேன் வரையிலான உயர் தர மருத்துவம் வரையில் இந்த மருத்துவ முகாமில் மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.
இன்றும் மருத்துவ முகாம் நடக்கும் நிலையில் மாப்பிள்ளையூரணிக்கு கனிமொழி வரவில்லை. ஆனாலும், ‘கனிமொழிக்கு எங்க நன்றிய சொல்லிடுங்க’ என்று தூத்துக்குடி திமுக மாசெ அனிதா ராதாகிருஷ்ணனிடம் கூறியுள்ளனர் பொதுமக்கள்.
தூத்துக்குடியில் உதயநிதி ஸ்டாலின் ’டேரா’... அதிர்ச்சியில் கனிமொழி!