விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவர்களை அப்பள்ளியின் ஆசிரியர் காட்வின், தனது சொந்த செலவில் விமானத்தில் அழைத்துச் சென்று ஆச்சர்யமளித்துள்ளார். ஆசிரியரின் இந்தச் செயலால் மாணவர்கள் குதூகலம் அடைந்துள்ளனர்.
மதுரை அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் காட்வின் வேத நாயகம் ராஜ்குமார். 45 வயதாகும் இவர் இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு விளையாட்டின் மீதான ஆர்வத்தை ஊக்குவித்து அவர்களை விளையாட்டில் ஈடுபட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். மாணவர்களை பல்வேறு போட்டிகளிலும் பங்கேற்க வைத்து வருகிறார். இதற்கிடையே, கடந்த பிப்ரவரி மாதம் மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் மாநில அளவிலான நீச்சல் போட்டிகள் நடந்தன. இதில் இந்தப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்களும் பங்கேற்றனர். போட்டியில் பங்கேற்கும் மாணவர்களிடம் சில சர்ப்ரைஸ் அறிவிப்பு ஒன்றை கூறினார். அதாவது, இந்தப் போட்டியில் பதக்கம் ஜெயித்தால் மாணவர்களை விமானத்தில் அழைத்துச் செல்வதாக உறுதி கூறியிருந்தார் காட்வின்.
அவர் எதிர்பார்த்தபடி அவரின் மாணவர்கள் அந்தப் போட்டியில் வெற்றிபெற்றனர். அங்குசாமி, தீபன்ராஜ், முத்து கணபதி, முகேஷ்குமார் ஆகியோர் 2 பிரிவுகளில் பங்கேற்று வெள்ளிப்பதக்கம் பெற்றனர். மாணவர்கள் பதக்கம் பெற்றதால் தான் சொன்னது போலவே, அவர்களை விமானத்தில் அழைத்துச் சென்று மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் ஆசிரியர் காட்வின். தனது சொந்த செலவில் இந்த நான்கு மாணவர்களையும் மதுரையில் இருந்து சென்னைக்கு அழைத்துச் சென்றவர், அங்கு முக்கிய இடங்களை சுற்றிக்காண்பித்து பின்னர் அவர்களுக்கு விருந்து அளித்தும் உபசரித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய ஆசிரியர் காட்வின், ``நான் 40 வயதுக்கு மேல் தான் விமானத்தில் சென்றேன். கிராமப்புற மாணவர்கள் இந்த வாய்ப்பு விரைவாக கிடைக்க வேண்டும் என்பதற்காக போட்டியில் வென்றால் ஊக்கப்படுத்தினேன். நான் எதிர்பார்த்தபடியே அவர்கள் போட்டியில் வென்று வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார்கள். இது முதல்முறையாக இருக்காது. இனிமேலும் விளையாட்டுப் போட்டியில் சாதிக்கும் மாணவர்களை விமானத்தில் அழைத்துச் செல்வேன்" எனப் பூரிப்புடன் கூறியுள்ளார்.