ஸ்டாலின்தான் அடுத்த முதல்வர் கிருஷ்ணகிரியில் ராகுல் பேச்சு!

Rahulgandhi said in krishnagiri rally, that stalin will be the next c.m. of tamilnadu.

by எஸ். எம். கணபதி, Apr 12, 2019, 13:21 PM IST

‘‘தமிழர்களை தமிழர்தான் ஆள வேண்டும். நாக்பூரில் இருந்து யாரும் ஆளக் கூடாது. ஸ்டாலின்தான் அடுத்த முதல்வர்’’ என்று கிருஷ்ணகிரியில் நடந்த காங்கிரஸ் தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் ராகுல்காந்தி பேசினார்.

தமிழகத்தில் தி.மு.க.வுடன் காங்கிரஸ் கூட்டணி சேர்ந்துள்ளது. இந்த அணியின் சார்பில் கிருஷ்ணகிரி நாடாளுமன்றத் தொகுதியில் டாக்டர் செல்லக்குமார் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து கிருஷ்ணகிரியில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் காங்கிரஸ்

தலைவர் ராகுல்காந்தி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:
பல்வேறு மொழி, இனம், மதம் கொண்ட மக்கள் வாழும் நாடு இந்தியா. இப்படி பல வேற்றுமைகள் கொண்ட நாட்டை ஒரே சித்தாந்த நாடாக மாற்ற நரேந்திர மோடி முயற்சிக்கிறார். ஆனால், தமிழர்களுக்கு தமிழ்மொழி, கலாச்சாரம், பண்பாடு எல்லாமே முக்கியமானது. அதை யாராலும் மாற்ற முடியாது.

அ.தி.மு.க. அரசை கட்டுப்படுத்துவதன் மூலம் ஒட்டுமொத்த தமிழர்களையும் கட்டுப்படுத்தி விடலாம் என்று மோடி நினைக்கிறார். அது நடக்காது. தமிழர்களை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. தமிழ் மொழி, கலாச்சாரம், பண்பாட்டை யாராலும் மாற்ற முடியாது. நரேந்திர மோடி 10 நிமிடம் தமிழினத்தின் வரலாற்றை படித்தால் அவருக்கு இது புரிந்திருக்கும். தமிழர்களை அன்பால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும்.
நரேந்திர மோடி 5 ஆண்டுகளாக 15 பேருக்காக மட்டும் ஆட்சி நடத்தினார். அனில் அம்பானி, மெகுல்சோக்ஷி, நிரவ் மோடி போன்ற அந்த 15 பேரும் அவரது நண்பர்கள். பணக்காரர்களின் 3 லட்சத்து 50 ஆயிரம் கோடி கடன்களை மோடி தள்ளுபடி செய்கிறார். ஆனால், ஏழை விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய மறுக்கிறார்.

பணமதிப்பிழப்பினால் திருப்பூரில் ஜவுளித் தொழில் அழிந்தது. காஞ்சிபுரத்தில் பட்டுத் தொழில் அழிந்தது. லட்சக்கணக்கான மக்கள் வேலையிழந்தனர். அதே போல், தான் ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் போடுவேன் என்று மோடி சொன்னார். அது பொய் என்பது எனக்கு தெரியும். எனவே, நான் சில பொருளாதார நிபுணர்களை அழைத்து பேசினேன்.

இந்த நாட்டின் ஏழை மக்களி்ன் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதற்கு அவர்களின் வங்கிக் கணக்கில் உண்மையில் எவ்வளவு போட முடியும்? இதற்கு பெரிய திட்டம் போட வேண்டாம். பொருளாதாரக் கணக்கு போட்டு சாதாரணமாக ஒரு தொகையைச் சொல்லுங்கள் என்றேன். அவர்கள் சொன்னது போல், நாட்டில் உள்ள 20 சதவீத ஏழைகளுக்கு ஆண்டுக்கு 72 ஆயிரம் வங்கிக் கணக்கில் போடத் திட்டம் தயாரித்துள்ளோம். இதன் மூலம் அவர்களின் வாழ்க்கைத் தரம் உயரும். அவர்கள் அந்த பணத்தை செலவழி்க்கும் போது பொருட்கள் விற்பனை அதிகரிக்கும். அதன் மூலம் தொழில் உற்பத்தி பெருகும். வேலைவாய்ப்பு அதிகரிக்கும். அதே போல், மத்திய அரசில் காலியாக உள்ள 24 லட்சம் பணியிடங்களை நிரப்புவோம். ஊராட்சிகளில் 10 லட்சம் பேரை நியமிப்போம். விவசாயத்திற்கு தனி பட்ஜெட் போடப்படும்.

கடைசியாக ஒரு விஷயம். தமிழர்களை தமிழர்தான் ஆள வேண்டும். நாக்பூரில் இருந்து யாரும் ஆளக் கூடாது. தமிழகத்தில் அடுத்தது ஸ்டாலின்தான் முதலமைச்சர் என்று நான் உறுதி கூறுகிறேன்.
இவ்வாறு ராகுல்காந்தி பேசினார்.

தமிழகத்தை நாக்பூரில் இருந்து யாரும் ஆளக் கூடாது என்று ராகுல்காந்தி கூறியது, கவர்னர் பன்வாரிலால் புரோகித் மூலம் மத்திய அரசு ஆட்சி நடத்துகிறது என்று மறைமுகமாக சொல்வதாகும். காரணம், கவர்னர் புரோகித், நாக்பூரைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

You'r reading ஸ்டாலின்தான் அடுத்த முதல்வர் கிருஷ்ணகிரியில் ராகுல் பேச்சு! Originally posted on The Subeditor Tamil

More District news News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை