பீகாரில் நிதிஷ்குமார் மீண்டும் முதல்வராக தேர்வு.. பாஜக நெருக்கடி ஆரம்பம்..

பீகாரில் நிதிஷ்குமார் மீண்டும் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் நாளை பதவியேற்கவுள்ளார்.

by எஸ். எம். கணபதி, Nov 15, 2020, 15:37 PM IST

பீகார் மாநிலத்தில் கடந்த அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் 7ம் தேதிகளில் மூன்று கட்டமாக தேர்தல் நடைபெற்றது. ஆளும் ஐக்கிய ஜனதாதளம்-பாஜக கூட்டணியில் விவகாஷ்சீல் இன்சான் பார்ட்டி(விஐபி), இந்துஸ்தானி அவாமி மோர்ச்சா(ஹெச்ஏஎம்) உள்ளிட்ட கட்சிகள் இணைந்து போட்டியிட்டன. சிராக் பஸ்வானுடைய லோக்ஜனசக்தி கட்சி இந்த கூட்டணியில் இருந்து விலகினாலும், பாஜக போட்டியிடும் தொகுதிகளில் அந்தக் கட்சிக்கு ஆதரவு அளித்தது.

லாலுபிரசாத் யாதவின் ஆர்ஜேடி, காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட்(எம்.எல்), சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து மெகா கூட்டணியை உருவாக்கி போட்டியிட்டன. அந்த கூட்டணி, லாலுவின் மகனும் ஆர்ஜேடி தலைவருமான தேஜஸ்வி யாதவை முதல்வர் வேட்பாளராக நிறுத்தி போட்டியிட்டன.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக 74, ஐக்கிய ஜனதா தளம் 43, விஐபி 4, ஹெச்ஏஎம் 4 என்று மொத்தம் 125 தொகுதிகளில் வென்றுள்ளன. மெகா கூட்டணியில் ஆர்ஜேடி 75, காங்கிரஸ் 19, கம்யூ.(எம்.எல்) 12, சிபிஐ 2, சிபிஎம் 2 என்று மொத்தம் 110 தொகுதிகளில் வென்றுள்ளன.

ஐக்கிய ஜனதா தளம் வெறும் 43 தொகுதிகளில் மட்டுமே வென்றிருந்தாலும், அக்கட்சித் தலைவர் நிதிஷ்குமாரே மீண்டும் முதலமைச்சர் என்று பாஜக ஒப்புக் கொண்டிருந்தது.
இந்நிலையில், பாட்னாவில் முதலமைச்சரின் வீட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம், இன்று(நவ.14) பகல் 12.30 மணிக்கு நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கலந்து கொண்டார். கூட்டத்தில் முதலமைச்சராக மீண்டும் நிதிஷ்குமார் தேர்வு செய்யப்பட்டார்.

இதைத் தொடர்ந்து, நிதிஷ்குமார் ராஜ்பவனுக்கு சென்று கவர்னரை சந்தித்தார். மீண்டும் ஆட்சியமைக்க உரிமை கோரினா். அதை கவர்னர் ஏற்றுக் கொண்டார். இதையடுத்து, நிதிஷ்குமார் 4வது முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளார். 69 வயதான நிதிஷ்குமாருக்கு இந்த முறை ஆட்சியை நடத்துவதில் பல சிக்கல்கள் உள்ளன.
கடந்த 2015ம் ஆண்டில் ஐக்கிய ஜனதாதளம் 71 தொகுதிகளில் வென்றது. ஆர்ஜேடி 80 தொகுதிகளில் வென்றாலும் முதலமைச்சர் பதவியை நிதிஷ்குமாருக்கு விட்டு கொடுத்தது. தேஜஸ்வி யாதவ் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றார். அப்போதே ஆர்ஜேடி பெரிய கட்சியாக இருந்ததால், நிதிஷ்குமாரால் ஆட்சியை தொடர்ந்து நடத்த முடியாமல் விலகினார். அதன்பிறகு, பாஜகவுடன் கூட்டு சேர்ந்து ஆட்சியமைத்தார்.

இப்போது ஐக்கிய ஜனதா தளம் வெறும் 43 தொகுதிகளில் மட்டுமே வென்றிருக்கிறது. பாஜக 74 தொகுதிகளில் வென்று பெரிய கட்சியாக உள்ளது. எனவே, நிதிஷ்குமாருக்கு ஆட்சியில் பல நெருக்கடிகள் ஏற்படும் என்று பேசப்படுகிறது. ஏற்கனவே பாஜக 2 துணை முதல்வர் மற்றும் முக்கிய துறைகளின் அமைச்சர் பதவிகளை கேட்பதாக பேச்சு அடிபட்டு வருகிறது.
இந்நிலையில், நிதிஷ்குமார் நாளை முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். அதன்பின்பு, கூட்டணிக்குள் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, ஒரு வாரத்திற்குள் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

You'r reading பீகாரில் நிதிஷ்குமார் மீண்டும் முதல்வராக தேர்வு.. பாஜக நெருக்கடி ஆரம்பம்.. Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை