கொரோனா பரவல் அதிகரித்ததை தொடர்ந்து பஞ்சாபில் இன்று முதல் இரவு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்படுகிறது. கொரோனா நிபந்தனைகளை மீறுபவர்களுக்கான அபராதத்தை அதிகரிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா நோயால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை 44 ஆயிரத்தை தாண்டி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 44 ஆயிரத்து 376 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 92.2 லட்சத்தை தாண்டியுள்ளது. நேற்று 481 பேர் மரணமடைந்துள்ளனர். இதையடுத்து இதுவரை மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,34,699 ஆக உயர்ந்துள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் கணக்கின்படி நேற்று வரை 13.48 கோடி பரிசோதனைகள் நடத்தப்பட்டன. டெல்லி, மகராஷ்டிரா, பஞ்சாப் உள்பட மாநிலங்களில் நோய் பரவல் சற்று அதிகரித்துள்ளதால் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று இந்த மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து பஞ்சாப் மாநிலத்தில் நிபந்தனைகளை கடுமையாக்க மாநில முதல்வர் அமரீந்தர் சிங் உத்தரவிட்டுள்ளார். இதன்படி இன்று முதல் இரவு நேரங்களில் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்படும். இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு சட்டம் அமலில் இருக்கும். இந்த சமயத்தில் அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே பொதுமக்கள் வெளியே செல்ல முடியும். மேலும் கொரோனா நிபந்தனைகளை மீறுபவர்களுக்கான அபராதத் தொகையை அதிகரிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நிபந்தனைகளை மீறுபவர்களுக்கு 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். பஞ்சாப் மாநிலத்தில் இதுவரை கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஒன்றரை லட்சத்தை தாண்டி விட்டது. இதுவரை 4,650க்கும் மேற்பட்டோர் மரணமடைந்துள்ளனர். இதேபோல உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் ஊரடங்கு சட்ட நிபந்தனைகளை கடுமையாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி வரும் வாரம் முதல் எல்லா ஞாயிற்றுக்கிழமைகளிலும் இங்கு லாக்டவுன் அமல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.