குஜராத்திலும் பள்ளிகள் திறப்பு.. தமிழகத்தில் எப்போது? பெற்றோர்கள் கடும் அதிருப்தி..

by எஸ். எம். கணபதி, Jan 11, 2021, 10:06 AM IST

குஜராத், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படாததால் பெற்றோர்கள், மாணவர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், இந்தியாவில் ஒரு கோடிக்கும் அதிகமானோருக்குப் பரவியிருக்கிறது. நோய்த் தொற்று பரவாமல் தடுப்பதற்காகக் கடந்த ஆண்டு மார்ச் முதல் ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஏப்ரலில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. இதன்பின்னர், மத்திய உள்துறை அமைச்சகம் ஊரடங்கு தளர்வுகளை படிப்படியாக அறிவித்தது.

இதன்படி, மாநிலங்கள் கட்டுப்பாடுகளைத் தளர்த்தின.தற்போது நோய்ப் பாதிப்பு அதிகமாக உள்ள கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலேயே பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. கர்நாடகாவில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. வரும் 14ம் தேதி முதல் கல்லூரிகளில் முதலாண்டு முதல் கடைசி ஆண்டு வரை மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.குஜராத்தில் இன்று(ஜன.11) முதல் 10, 12ம் வகுப்புகளுக்குப் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.

ஆனால், தமிழகத்தில் மட்டும் ஆரம்பம் முதல் பள்ளிக் கல்வித் துறை நீண்ட குழப்பத்தில் உள்ளது. மற்ற மாநிலங்களில் எல்லாம் பள்ளியிறுதி பொதுத் தேர்வுகளை ரத்து செய்த போது, நாங்கள் தேர்வு நடத்தியே தீருவோம் என்று 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஹால்டிக்கெட் கொடுத்தது. அதன்பிறகு, ஐகோர்ட் தலையிடவே தேர்வுகளையே ரத்து செய்து, மதிப்பெண் விதிமுறைகளை வகுத்தது. அதன்பிறகு, 10, 12ம் வகுப்புகளுக்குப் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவித்தது. அப்போது ஆந்திராவில் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு கொரோனா பாதித்ததாகச் செய்தி வரவே, தமிழக பள்ளிக் கல்வித் துறை வழக்கம் போல் பல்டி அடித்தது. இதற்குப் பிறகு பெற்றோர்களிடம் கருத்துக் கேட்கப்பட்டது. மாணவர்களுக்கு விடுமுறை விட்டால் அவர்கள் வீடுகளிலேயே இருப்பதில்லை. ஊர் சுற்றுவதால் அவர்களுக்குத் தொற்று பரவவே வாய்ப்பிருக்கிறது. அதனால் பள்ளிகளைத் திறங்கள் என்று பெற்றோர்கள் கருத்து கூறினர்.

ஆனாலும், பள்ளிகள் திறப்பதை பெரும்பாலான பெற்றோர் விரும்பவில்லை என்று கூறி, பள்ளி திறப்பை மறுபடியும் தள்ளிவைத்தனர். மீண்டும் கடந்த வாரம் பெற்றோர்களிடம் கருத்துக் கேட்கப்பட்டது. இப்போதும் 55 சதவீத பெற்றோர்கள் பள்ளிகளைத் திறக்குமாறு கூறியிருப்பதாகச் செய்தி வெளியாகியிருக்கிறது. ஆனாலும் பள்ளிக் கல்வித் துறை எதுவும் அறிவிக்காமல் மவுனம் காத்து வருகிறது. இதனால், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் பாதிக்கிறதே என்று கடும் அதிருப்தியில் உள்ளனர். ஆசிரியர்களும் கடும் அதிருப்தி அடைந்திருக்கின்றனர். காரணம், பல ஆசிரியர்கள் சத்தமில்லாமல் மாணவர்களைப் பள்ளிக்கு வரவழைத்துச் சிறப்பு வகுப்புகளை நடத்தியுள்ளனர். அவர்களை முதன்மை கல்வி அலுவலர்கள் கடுமையாக எச்சரித்து வகுப்புகளை நடத்த விடாமல் செய்திருக்கிறார்கள். தற்போது சென்னையில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் தினமும் வந்து அட்மிஷன் உள்ளிட்ட வேறு வேலைகளைச் செய்து வருகிறார்கள்.

You'r reading குஜராத்திலும் பள்ளிகள் திறப்பு.. தமிழகத்தில் எப்போது? பெற்றோர்கள் கடும் அதிருப்தி.. Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை