பிரான்ஸ் முன்னாள் அதிபரும், ரஃபேல் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட போது அந்நாட்டின் அதிபராக இருந்தவருமான ஹோலண்டே அண்மையில் கூறிய கருத்துக்கு எதிராக பிரதமர் மோடி கூறியதே சரியானது என்று பிரான்ஸ் அதிபர் எம்மானுவேல் மேக்ரன் கூறியுள்ளார்.
இதன் அடிப்படையில், பிரதமர் மோடி மீது காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். பிரதமரே தனிப்பட்ட முறையில் பேரம் பேசி ரஃபேல் ஒப்பந்தத்தை மாற்றியிருக்கிறார் என்று அவர் குற்றம்சாட்டினார். திவால் ஆன அனில் அம்பானிக்கு பில்லியன் கணக்கான டாலர்கள் மதிப்புள்ள ஒப்பந்தத்தை மோடி கொடுத்துள்ளார் என்பதை தெரிய வைத்த ஹோலண்டேவுக்கு நன்றி என்றும் ராகுல்காந்தி கூறியிருந்தார்.
இது தவறான குற்றச்சாட்டு என்பதை குறிக்கும் வகையில், ரஃபேல் ஒப்பந்தம் என்பது இந்தியா மற்றும் பிரான்ஸ் அரசுகளுக்கு இடையிலான ஒப்பந்தம் என்று பிரதமர் மோடி கூறியிருந்தார். பிரதமர் மோடி கூறியதான் சரி என்றும் இரு நாட்டு அரசுகளுக்கு இடையேதான் ஆலோசனை நடைபெற்றது என்றும் பிரான்ஸ் அதிபர் எம்மானுவேல் மேக்ரன் கூறியுள்ளார்.
நியூயார்க்கில் செய்தியாளர்களிடம் பேசிய பிரான்ஸ் அதிபர் பாதுகாப்புத் துறையில் இந்தியா-பிரான்ஸ் இடையே வலுவான உறவு உள்ளது என்றும், வேறு எதைப் பற்றியும் தாம் கருத்துச் சொல்ல விரும்பவில்லை எனவும் மேக்ரான் கூறியுள்ளார்.