சபரிமலைக்கு 50-க்கும் மேற்பட்ட பெண்கள் தனித்தனி குழுக்களாக அணிவகுத்து வருவதாக கிடைத்த தகவலால் உச்சகட்ட பரபரப்பு நிலவுகிறது.
பம்பைக்கு இன்று அதிகாலை வந்த சென்னை மனிதி அமைப்பின் 12 பெண்கள் குழுவால் பரபரப்பு ஏற்பட்டது. சன்னிதானம் நோக்கி போலீஸ் பாதுகாப்புடன் முன்னேற முயன்ற பெண்களை நாலா புறமும் சூழ்ந்து கற்களால் வீசி ஐயப்ப பக்தர்கள் முன்னேற விடாமல் தடுத்து நிறுத்தினர்.
வேறு வழியின்றி அந்தப் பெண்களை போலீசார் திருப்பி அழைத்துச் சென்றனர். ஆனாலும் சன்னிதானம் செல்லாமல் திரும்ப மாட்டோம் என்று அடம் பிடித்து பம்பை காவல் நிலையத்தில் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் தனித்தனி குழுக்களாக இன்று சபரிமலை நோக்கி வருவதாக கிடைத்த தகவலை அடுத்து பரபரத்து கிடக்கிறது சபரிமலை. பெண்கள் வந்தால் தடுக்க பம்பை, சன்னிதானத்தைச் சுற்றியுள்ள வனப்பகுதிகளில் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் குவிந்து வருவதால் பதற்றம் அதிகரித்துள்ளது.
அனைத்து வயது பெண்களும் ஐயப்பனை தரிசிக்க உச்சநீதிமன்றம் அனுமதி கொடுத்துள்ளது. இதனை அமல்படுத்த ஆளும் இடதுசாரி அரசு முனைப்பு காட்டுகிறது.
ஆனால் பா.ஜ.க, காங்கிரஸ் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துவதால் கலவர பூமியாக காட்சியளிக்கிறது சபரிமலை.